இளம் வயதில் ஃபிட்டான உடல்வாகைப் பெற வேண்டும், நடுத்தர வயதில், இளமையான தோற்றத்தைப் பெற வேண்டும்; தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று பலரும் இன்று ஜிம்மை நோக்கி படையெடுக்கின்றனர். ஆனால், ஜிம்மில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றிய விழிப்பு உணர்வு நம்மிடம் இல்லை. ஜிம்முக்கு செல்பவர்கள் கவனிக்க வேண்டியது, தவிர்க்க வேண்டியது பற்றி ஈரோடு சாம்சன் ஜிம்மின் மூத்த உடற்பயிற்சி ஆலோசகர் சரவணனிடம் கேட்டோம்.
சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள்!
ஃபிட்னெஸ்ஸில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், ஜிம்மை தேர்ந்தெடுப்பதிலும், ஜிம் கருவிகளைக் கையாளுவதிலும் கவனமாக இருக்கவேண்டும். கட்டணத்தைப் பார்க்காமல், நல்ல ஆரோக்கியமான, அடிப்படை வசதிகள் கொண்ட ஜிம்மாகத் தேர்ந்தெடுத்து அங்கு சேருவது முக்கியம்.
ஜிம்மில் இருக்கும் போது எப்போதுமே ஒரு சிறிய துண்டை கையில் வைத்திருக்க வேண்டும். ஜிம்மில் உள்ள ஒவ்வொரு கருவியைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பயன்படுத்திய பின்பும் இந்தத் துண்டைக் கொண்டு கை கால்களை நன்றாகத் துடைக்க வேண்டும். ‘ஹேண்ட் சானிடைசர்’ உபயோகப்படுத்துவது அதைவிடச் சிறந்தது.
தினசரி துவையுங்கள்!
ஜிம் வொர்க் அவுட் முடிந்ததும், வியர்வையில் நனைந்த ஆடையைக் கழற்றி தங்கள் பைகளில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வது பலரது பழக்கம். சிலர், அடுத்த நாளும் அதே ஆடையைப் பயன்படுத்துவார்கள். இது ஆரோக்கியமானது இல்லை. ஜிம்மில் பயன்படுத்திய ஆடையை அன்றே துவைத்துவிட வேண்டும். துவைக்காத துணியில் கிருமிகள் நன்கு வளர்ந்து, உடல் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்துவிடும். வொர்க் அவுட் செய்ததும் நன்றாகக் குளிக்க வேண்டும்.
ஜிம் ‘பேக்’கை கவனியுங்கள்!
ஜிம் ‘பேக்’ சுத்தமாக இருக்க, வியர்வைத் துணியை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளே வையுங்கள். வீட்டுக்கு வந்ததும் அந்தத் துணியை எடுத்துத் துவைக்கப்போட்டதும், கிருமி நாசினி கொண்டு பிளாஸ்டிக் பையைத் துடைத்துக் காய வையுங்கள். இதனால் கிருமிகள் வளருவது தவிர்க்கப்படும்.
பாதங்கள் உலர்வாக இருக்கட்டும்!
வியர்வை அதிகமாக வரும்போது கால் பாதங்கள், விரல் இடுக்குகளில் பூஞ்சை – காளான் வளரும். இதைத் தவிர்க்க ஜிம் வொர்க் அவுட் முடிந்ததும் பாதங்களை நன்றாக சோப்பு போட்டுக் கழுவுங்கள். குளித்து முடித்ததும் பாதங்களைத் துடைத்துவிட்டு, ஆன்டி ஃபங்கல் பவுடரைப் போட்டுக்கொள்ளலாம்.
‘ஷேர்’ செய்யாதீர்கள்
உங்களுக்கு என்று தனியாக தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் வாய்வைத்துக் குடித்த தண்ணீர் பாட்டிலை மற்றொருவர் குடிக்கும்போது, பாக்டீரியல் கிருமிகள் பரவலாம். நன்கு வெந்நீரில் போட்டு பாட்டிலைச் சுத்தம் செய்து, வீட்டில் இருந்தே பாதுகாப்பான தண்ணீரை எடுத்துச் செல்லலாம். தண்ணீர் பாட்டில், டவல், சோப், சீப்பு அல்லது மேக்-அப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதீர்கள்.
அலுவலகத்தில் இருக்கும் ‘ஜிம்’களில், அரை மணி நேர டிரெட்மில் பயிற்சிக்காக அடுத்தவரது ஷூக்களை பயன்படுத்துவதும் தோல் பிரச்னைக்கு வழிவகுத்துவிடும். ஜாக்கிரதை!
தவிர்த்து விடுங்கள்!
சாதாரண காய்ச்சல், ஜலதோஷமாக இருந்தால் கூட ஜிம்முக்கு செல்லவேகூடாது. இதனால் மற்றவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது. காயங்கள் ஏதேனும் இருந்தால் புண் ஆறும் வரை ஜிம் பக்கம் செல்ல வேண்டாம். இதனால் நோய்க் கிருமித் தொற்றுக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். சிறிய காயமாக இருந்தால் அதை நன்றாக ‘பேண்ட் எய்ட்’ போட்டு பாதுகாப்பாக மூடிக்கொள்ளுங்கள்.
–
ஆரோக்கியமான ஜிம் பழக்கம்
தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்துகொள்ளவேண்டாம்
ஒவ்வொருமுறையும் உடற்பயிற்சி செய்தவுடன் குளிக்கவேண்டும்
ஒவ்வொரு முறை உடற்பயிற்சி முடிந்ததும் ஆடையைத் துவைக்கவேண்டும்
நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஜிம்மைத் தவிர்த்துவிடுதல் நலம்.