ஆண்டுக்கணக்கில் பாக்கெட் பாக்கெட்டாக சிகரெட்டை ஊதித்தள்ளுபவர்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆணோ, பெண்ணோ அவர்களிடையே உள்ள புகைப்பழக்கம் செக்ஸ் ஆசையை முற்றிலும் அழித்துவிடுகிறது என்று எச்சரிக்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சிகரெட் புகைப்பதனால் ஏற்படுகின்ற தீமைகள் என்ற உத்தேசமாகச் சொல்லப்பட்டு வந்தவை அனைத்தும் இன்றைக்குப் பல அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு விட்டன. இவ்வகை ஆய்வுகள் மேலும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. புகைப்பதனால் விளைகின்ற தீமை களைப் பட்டியலிட்டால் அது முடிவில்லாது நீண்டு கொண்டே போகும்.
புகையிலையுள்ள நிகோடின் எனப்படும் கொடிய விஷத்தினால் குறைபாடுடைய கரு, கருச் சிதைவு போன்றவைகள் பற்றிய பல ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. அவற்றைத் தொடர்ந்து தற்போது புகைப்பழக்கம் இனக்கவர்ச்சி ( Sex attraction) யை அழிப்பது டன் ஆண் பெண் உடலுறவைப் பெரிதும் பாதிக்கின்றது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது. மேலும், ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து புகைக்கின்ற பல ஆண்கள் உடலுறவில் நாட்டம் இன்றி போகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
அண்மையில் போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் சிறுநீரியல் துறைத் தலைவரான டாக்டர் இர்விங் கோல்ட் ஸ்டெய்ன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
இரண்டு ஆய்வுகளின் மூலம் ஆண்குறி விறைப்பின்மைக்காக மருத்துவம் செய்து கொள்ள வந்த 1011 ஆண்களில் 78 சதவிகிதம் அதாவது 789 பேர்கள் தீவிரமான புகைப்பழக்கமுள்ள வர்கள் என்பது தெரியவந்ததுடன், இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுவான காரணம் புகைப்பழக்கம் என்பதுதான். ஆண்குறிக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் நிகோட்டினினால் பாதிக்கப்பட்டுக் குறுகிப் போவதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடுமென்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது ஆய்வில் ஆண்குறி அளவு குன்றல் ஆகியவற்றிற்கு மருத்துவம் செய்துகொள்ள வந்த 120 புகைப்பழக்க முடையவர்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். நுண்ணிய கருவிகளைக் கொண்டு அவர்களது ஆண்குறிக்குச் செல்கின்ற இரத்தத்தின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது புகைக்கின்ற சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இரத்தம் செல்கின்ற அளவு குறைந்து கொண்டே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தவிர வேறொரு ஆய்வின் மூலம் “புகைப்பழக்க முடையவர்களின் விந்தணுப்பாகில் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து இருப்பதும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் இவர்களின் விந்தணுப்பாகில் காணப்பட்ட விந்தணுக்களில் பல குறைபாடு உடையவை களாகவும், இயல்பு நிலைக்கு மாறுபட்டவை களாகவும் இருந்தன.
புகைப்பதை வழக்கமாகக் கொண்ட பெண்கள் பாலுறவில் ஆர்வம் குன்றியவர்களாக உள்ளனர். அத்துடன் அவர்களது கருவுறும் திறனும் 43 சதவிகிதம் குறைவு பட்டிருந்தது”
மற்றுமொரு ஆய்வின்படி புகைக்கின்ற பெண்கள் பிற பெண்களை விட இரண்டாண்டுகள் முன்னரே மாதவிலக்கு நிற்கின்ற நிலையை (Menopause) அடைகின்றனர் என்று தெரியவந்தது.
மேற்கண்ட ஆய்வு முடிவுகளிலிருந்து செக்ஸ் எனும் பாலுறவு நிலைக்கும் புகைப்பழக்கத்திற்கும் மறுக்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது உறுதியாகின்றது. இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருத்துவர்கள் சங்க இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆண்மைக் குறைவு பற்றி மனங்குமைந்து கவலைப்படுபவர்கள் புகைப் பழக்கமுடைய வர்களாக இருந்தால் உடனடியாக அப்பழக் கத்திலிருந்து மீள முயல வேண்டும். அப்பொழுதுதான் இழந்து போன இல்லற சுகத்தை மீட்கமுடியும் மேலும் குறைபாடில்லாத சந்ததியை உருவாக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.