Home ஆரோக்கியம் சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?

20

1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?
பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.
2. ஒழுங்கற்ற உணவுமுறை சினைப்பை கட்டிகளுக்கு காரணமாகுமா?
ஒழுங்கற்ற உணவுமுறை, ஹார்மோன் சுரப்பில் சிக்கலை உண்டாக்கி, சினைப்பை நீர்க்கட்டிகளை உருவாக்கும். இக்கட்டிகள் உருவாகிவிட்டால், ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். அதிலும் ‘டெஸ்டோஸ்டிரான்’ மிக அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது முற்றிலும் தடைபடும்.
3. நீரிழிவு நோய்க்கும் சினைப்பை கட்டிகளுக்கும் தொடர்புண்டா?
நிச்சயம் உண்டு. பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும், அவர்களின் பெண்ணுக்கு சர்க்கரை நோய்த் தாக்கத்துடன் இத்தகைய நீர்க்கட்டிகளின் தாக்கமும் இருக்கும். பிறப்பிலேயே, அவர்களுக்கு இன்சுலினுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அமையப் பெற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்!
4. சினைப்பை கட்டிகளோடு, கருவும் உருவாகிவிட்டால் ஆபத்தா?
நிச்சயம் ஆபத்துதான்! கரு உருவாவதற்கு கரு முட்டைகள் அவசியம். ஆனால், கரு வளர்வதற்கு ஏற்ற இடம் கர்ப்பப்பை மட்டுமே! நெல்லிக்காய் அளவில் இருக்கும் சினைப்பையால் கரு வளர்ச்சியின் அழுத்தத்தை தாங்க முடியாது. ஒரு மாத கருவோ அல்லது இரு மாத கருவோ சினைப்பையில் இருந்து வெடித்துவிட்டால், தாய் உயிருக்கே ஆபத்து.
5. சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது?
கர்ப்பப்பையின் வலது, இடது பக்கங்களில் நெல்லிக்காய் அளவில் முட்டை உற்பத்தி செய்யும் பகுதிதான் சினைப்பை. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் இருந்து, இந்த சினைப்பை பகுதியில் நீர்க்கட்டிகள் உற்பத்தியாகும். இரண்டாவது வாரத்தில், இவைகள் வெடித்து, கருமுட்டையை வெளியேற்றும். இம்முட்டைகள் கருக்குழாய் வழியாக கர்ப்பப்பையை அடையும். சில சமயங்களில், ஹார்மோன் சுரப்பிகளின் வேறுபாட்டால், இந்த நீர்க்கட்டி வெடிக்காமல் 25 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து விடும்.
6. சினைப்பை கட்டிகளுக்கான சிகிச்சை முறைகள்?
15 வயது முதல் 25 வயது திருமணம் ஆகாத பெண் வரை ஹார்மோன் சிகிச்சை; குழந்தைப்பேறு இல்லாதவருக்கு நீர்க்கட்டி உடைந்து போக மருந்துகள்; குழந்தைகள் பெற்ற பெண் என்றால் மாதவிடாய் சீராக நடைபெற மாத்திரைகள் அல்லது கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சைகள்; கட்டிகளை நீக்க வேண்டும் என்றால், நுண்துளை அறுவை சிகிச்சை!
7. சினைப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்?
அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் அல்லது மாதவிடாய் சில மாதங்களுக்கு வராமலே இருக்கும். உடல் பருத்து விடும். முகத்தில் ரோமங்கள் முளைக்கும். தோலின் நிறம் மாறும். உடலில் பல்வேறு இடங்களில் கருமை அதிகரிக்கும். ஆண்தன்மை ஏற்படும்.
8. சினைப்பை நீர்க்கட்டி மலச்சிக்கலை உண்டாக்குமா?
சில கட்டிகள் 35 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து, வயிறு முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால், அருகருகே இருக்கும் மற்ற உறுப்புகளை இக்கட்டி அழுத்தும். இதன்மூலம் சிறுநீர் கழிக்கும்போதும், மலம் கழிக்கும்போதும் பிரச்னைகள் உருவாகும்.
9. அதீத மகப்பேறு இடைவெளி நீர்க்கட்டிகளுக்கு ஆதாரமா?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் குழந்தை பிறக்கும்போது சினைப்பை நீர்க்கட்டி இல்லை. ஆனால், இரண்டாவது குழந்தைக்கான இடைவெளியில் சினைப்பை நீர்க்கட்டிக்கான தாக்கம் இருந்தால், கண்டிப்பாக இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்பு தள்ளிப்போகும்.
10. சினைப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும் முறைகள்?
அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் எடை குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெய் பலகாரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.