Home குழந்தை நலம் சமைக்காத அரிசி சாப்பிடும் குழந்தைக்கு சத்து குறைபாடு வரும்!

சமைக்காத அரிசி சாப்பிடும் குழந்தைக்கு சத்து குறைபாடு வரும்!

23

சின்ன குழந்தைகள் சுவையாக இருக்கும் பொருளுக்கு அடிமையாகி விடுவார்கள். சிலர் சிலேட்டு குச்சி சாப்பிடுவார்கள். சிலர் சாக்பீஸ், சிலர் மண் சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் அரிசியை சாப்பிடுவார்கள். இது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அனீமியா வரும்

அரிசியின் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் அதனை சாப்பிடத் தொடங்குகின்றனர். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அனீமியா ஏற்படுவதோடு ஆரோக்கிய குறைபாட்டினை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து அல்லது 6 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் எப்போதும் அரிசியைத் தின்று கொண்டிருப்பதால் மஞ்சள் காமாலை வரும் என்றும் சில பெற்றோர் அச்சப்படுகின்றனர். ஆனால் இதில் உண்மையில்லை. அதேசமயம் அரிசியை மெல்லுவதால் பல சத்துக்குறைவு நோய்கள் ஏற்படும். எப்போது அரிசியை மென்று கொண்டிருந்தால் பசி குறைந்துவிடும். வேறு உணவுகளைச் சாப்பிடப் பிடிக்காது.

அரிசியை சாப்பிடுவது பற்களுக்கு பாதுகாப்பானதல்ல. அதேபோல் வயிறுக்கு ஏற்றதல்ல. அரிசியில் மாவுச்சத்து அதிகம் உள்ளது. இதுமட்டும் உடல் வளர்ச்சிக்குப் போதாது. இதனால் ரத்த சோகை, பார்வைக் குறைபாடு, தோல் நோய்கள், புரதச் சத்து குறைவு நோய்கள், வைட்டமின் பற்றாக்குறை நோய்கள் என்று பல நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளையே பழக்கப்படுத்த வேண்டும். சமைக்கும் போது அரிசியை எடுத்து வாயில் போடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தால் அதை பார்க்கும் குழந்தைகளுக்கும் அரிசியை எடுத்து சாப்பிடுகின்றனர். எனவே பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.