ஓர் குழந்தை வீட்டிலிருந்தால் போது வீட்டையே இரண்டாக்கி வீட்டில் உள்ள அனைவரும் சுறுசுறுப்பாய் இருக்குமாறு வேலை வாங்கிடும். குழந்தையை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு நம்மால் நிம்மதியாக அங்குமிங்கும் நகரக்கூட முடியாது. 24 மணி நேரமும் குழந்தையை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். இந்த சூழ்நிலையில் பெற்றோருக்கு ஓய்வு என்பது குழந்தை தூங்கும் நேரம் மட்டும் தான். நாள் முழுவதும் விளையாடினாலும் தூங்குவேனா என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை தூங்க வைக்க முத்தான யோசனைகள்.
கண் : குழந்தை சுறுசுறுப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும். அதனை கண்களை பார்த்து பேசுவதை, சிரிப்பதை தவிர்த்திடுங்கள். ஆரம்ப நிலைகளில் குழந்தை கண்ணைப் பார்த்து மட்டும் தான் இன்னார் நம்முடன் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும். நீங்கள் குழந்தையின் கண்ணை பார்த்துக் கொண்டிருந்தால் ஏதோ நம்மிடம் சொல்கிறார்கள் என்று குழந்தையும் ஆவலுடன் காத்திருக்கும்.
குழந்தை மட்டும் தனியாக : டியூப் லைட்டை போட்டுவிட்டு, ஹாலில் டிவியை அலறவிட்டு உள் அறையில் குழந்தையை தூங்கச் சொல்லி தட்டிக் கொடுத்தால் குழந்தை தூங்காது. குழந்தை தூங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குங்கள். அறையை இருட்டாக்கிடுங்கள், குழந்தைக்கு அருகில் நீங்களும் படுத்துக் கொள்ளுங்கள், போன் நோண்டுவதோ அல்லது, பாட்டு கேட்பதோ கூடாது. அதிக குளிர் இல்லாது அணைப்பாக இருந்தால் நல்லது.
டயாப்பர் : பகலில் எந்த நேரத்தில் டயாப்பர் போட்டிருந்தாலும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் டயாப்பரை மாற்றிடுங்கள். ஏனென்றால் இரவு முழுவதும் கிட்டத்தட்ட 8 முதல் 10 மணி நேரம் வரை குழந்தை தூங்க வேண்டும். அவ்வளவு நேரமும் போடப்பட்டிருப்பதால் குழந்தைக்கு அரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு .
சத்தங்கள் : குழந்தைகள் சின்ன சின்ன சத்தங்களுக்கு எல்லாம் அதிர்ந்து விடும். தூங்கச் சென்ற பிறகு மிக்ஸி போடுவது குத்துப் பாடல்களை கேட்பது, கத்திப் பேசுவது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். ஒரு முறை அதிர்ந்தால் அது நார்மலாவதற்கே அதிக நேரம் எடுக்கும். தலையை வருடிக் கொடுத்து, தட்டிக் கொடுங்கள். அமைதிப்படுத்துங்கள்.
பழக்கம் : தினசரி இரவு தூங்கும் நேரத்தை ஒரே நேரத்தில் கடைபிடியுங்கள். மாலை நேரத்தில் குழந்தையை தூங்க வைத்தால் அது, சரியாக இரவு நாம் தூங்கும் போது முழித்துக் கொள்ளும். இரவு தூங்குவதற்கு தாமதமாகும். இதனால் நேரம் மாற்றி நேரம் குழந்தையை தூங்க வைக்காதீர்கள்.
சுறுசுறுப்பு : குழந்தை திடீரென்று தூக்கத்தில் முழித்துக் கொண்டால் உடனேயே அதனை தூக்கி வெளியே செல்லாதீர்கள் அல்லது லைட்டை போட்டு அதிக வெளிச்சத்தை உண்டாக்கி அந்த சூழலையே மாற்றாதீர்கள். உடனேயே குழந்தை தன்னிடம் விளையாட வருகிறார்கள் என்று அதற்கு தயாராக வேண்டும் என்று நினைத்துக் கொள்ளும். அமைதிப்படுத்துங்கள், உடை, பெட்ஷீட் சரிப்படுத்துங்கள். தாய்ப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம்.