Home குழந்தை நலம் குழந்தைகள் எதனால் அழுகின்றது ??

குழந்தைகள் எதனால் அழுகின்றது ??

36

‘காது கொடுத்துக் கேட்டேன் குவா குவா சத்தம்.’ எம்.ஜீ.ஆர் வாயசைத்துப் பாடியது ஞாபகத்திற்கு வருகிறது. மனiவியின் வயிற்றில் காது வைத்துக் கேட்டபடி அவர் பாடினார். உண்மையில் காது கொடுத்தும் அவரால் குழந்தையின் சத்தத்தைக் கேட்டிருக்க முடியாது.

ஆனால் அவளின் கவர்ச்சியான வயிற்றில் தனது காதை வைத்ததில் அவர் கிளர்ச்சியடைந்தார் என்பதே நிசம். அது காமக் கிளரச்சி.

காது கொடுத்துக் கேட்காவிட்டாலும்

மாறாக, காது கொடுத்துக் கேட்காவிட்டால் கூட எந்தக் குழந்தையின் திடீர் அழுகைச் சத்தம் எழும்போதும் நாம் கிளர்ச்சியடைகிறோம். ஆனால் அது ஆனந்தக் கிளரச்சியல்ல. என்னவோ எதுவோ எனப் பதற வைக்கும் சஞ்சலக் கிளர்ச்சி.

குழந்தையின் அழுகைச் சத்தம் மிகவும் வீரியம் மிக்கது. ஒரு தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருக்கும்போது அல்லது பஸ்சில் பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு குழந்தையின் வீரிட்டு அழும் சத்தத்தைக் கேட்டால் யாராலும் அதை அசட்டை செய்ய முடியாது.

crying-baby

செய்யும் காரியத்தை பட்டெனக் கைவிட்டு என்னவாயிற்று எனப் பார்க்கத் தூண்டும். ஏதாவது செய்ய வேண்டும் என ஓடிச் சென்று உதவ முற்படும்.

பதப்படுத்தப்படும் மூளை

இதற்குக் காரணம் என்ன?

எமது மூளையானது அதற்குப் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள்.
ஒரு தாயானவள் தான் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட தனது குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் பதறி எழுகிறாள். அது அவளது குழந்தை. அதற்கு என்னவாயிற்றோ என்ற அவளது தனிப்பட்ட பாசம் காரணம் என்று சொல்லலாம்.

ஆனால் விஞ்ஞானிகளின் ஆய்வு அதற்கு அப்பாலும் செல்கிறது. தாயாக இருக்க வேண்டியதில்லை, தந்தையாகவும் இல்லை, அவர்கள் வீட்டுக் குழந்தையாகக் கூட இருக்க வேண்டியதில்லை. இதுவரை தாயாகவோ தந்தையாகவோ அனுபவப்பட்டிருக்க வேண்டியது கூட இல்லை.

எந்தக் குழந்தையின் அழுகையும் எந்த ஒரு நபரையும் அதிர்வுக்கு ஆட்படுத்தும் என்கிறார்கள்.
ஆங்கிலத்தில் படித்த ஒரு கவிதையின் இரு வரிகள் இவ்விடத்தில் ஞாபகம் வருகிறது. ‘புயலாக எழுந்து இடிமுழக்கமாக அதிர..’ வைக்கிறது குழந்தையின் அழுகை என்கிறது.

A baby’s cry is like a storm,
Like the thunder in the sky.

கவிஞனை மட்டுமல்ல எவரையுமே அவ்வாறு அதிர வைக்கும் என்பது உண்மையே.

‘சூழலிலிருந்து எழும் மற்றெந்தச் சத்தங்களையும் விட குழந்தையின் அழுகுரல் எமது மூளையின் கவனத்தை ஈர்க்கிறது’ என்கிறார் ஒக்ஸ்வோர்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Katie Young. இவர்தான் ‘குழந்தையின் அழுகுரல் எவ்வாறு மூளையைப் பாதிக்கிறது’ என்பது பற்றிய ஆய்வு செய்த குழுவின் தலைவராவர்.

வேகமாகக் கணிக்கும் விசேட ஆய்வு

ஆய்வு செய்தது எப்படி என்கிறீர்களா?

28 பேரின் மூளையை ஸ்கான் செய்தார்கள். வழமையான ஸ்கான் அல்ல.

magneto encephalography, எனப்படும் அதிவேகமாக மூளையின் செயற்பாட்டை கணிக்கக் கூடிய விசேட ஸ்கான் அது. குழந்தையின் அழுகுரலைக் கேட்கும்போது மட்டுமின்றி, பெரியவர்கள் அழும்போது, நாய் பூனை போன்ற மிருகங்கள் வேதனையில் அனுங்கும்போதும் அவர்களது மூளையை ஸ்கான் செய்து பார்த்தார்கள்.

குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் மூளையின் சில பகுதிகளில் திடீரென அதிகளவு செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. 100 மில்லிசெகன்ட் இடைவெளியின் பின்னர் கடுமையான செயற்பாடுகள் பிரதிபலிப்பாக மூளையில் ஆரம்பிக்கின்றன.

மூளையின் இந்தப் பிரதிபலிப்புச் செயற்பாடானது வேறெந்தச் சத்தங்கள் எழும்போதும் அவ்வளவு தீவிரமாக இருக்கவில்லை. மூளையின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இவை பிரதானமாகத் தென்பட்டன. முதலாவது

temporal gyrus என்ற மூளையின் பகுதியாகும். இதுதான் உணர்ச்சிகளை உரிய முறையில் செயற்படுத்தும் (emotional processing) மற்றும் பேச்சாற்றலுடன் தொடர்புடையதுமான பகுதி.

orbitofrontal cortex என்ற மற்றப் பகுதியானது ஒரு செயலானது நன்மையளிக்கக் கூடியதா அல்லது பாதகமானதா என்பதை உணர்த்தக் கூடியது என்பதுடன் உணர்ச்சிகளை உரிய முறையில் செயற்படுத்தவும் உதவுகிறது.

சிந்தனைக்கு முன் செயற்பாடு

உணர்ச்சிகளோடு தொடர்புடைய மூளையின் பகுதிகளில் குழந்தையின் அழுகையானது திடீரென செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதை நாம் முக்கியமாகக் கவனத்தில் எடுக்கவேண்டும். ஏனெனில் மூளையானது சிந்தித்துச் செயற்படுவதற்கான கால இடைவெளிக்கு முன்னரே உணர்ச்சிகள் தன்னிச்சையாக வெளிப்பட்டுவிடுகிறது.

உதாரணத்திற்கு நெருங்கிய உறவினரின் மரணத்தைக் கண்டதும் சட்டென எம்மையறியாமலே அழுகை வந்துவிடும். தொலைக் காட்சியில் கோமாளித்தனமான செயற்பாடுகளைக் கண்டதும் திடீரெனச் சிரிப்பு வந்துவிடுகிறது.

சார்ளி சப்ளின், சந்திரபாபு அல்லது நாகேசின் உடல்மொழிகளானவை காரணம் தெரியாது எம்மில் பக்கெனச் சிரிப்பை வரவழைக்கும். இவை உணர்ச்சிகளோடு தொடர்புடையவை.

வேறுபாடானது கலைவாணர், விவேக்கின் நகைச்சுவைகள். கண்டவுடன் சிரிப்பு வராது. சிரிக்க ஒரு கணம் தாமதமாகும். ஏனெனில் இங்கு கேட்பதைச் சிந்தித்து உணர சற்று நேரம் தேவைப்படுகிறது.
சிந்திக்க முதலே சிரிப்பது அல்லது அழுவதற்கும் அல்லது அது போன்ற எல்லா உணர்ச்சிகள் எழும்போது, மூளையின் முற்குறிப்பிட்ட பகுதிகளில் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

எமது மூளையில் ‘இவை முக்கியமான விடயங்கள்’ என ஏற்கனவே பதியப்பட்டுள்து. குறிப்பிட்ட விடயத்தை மூளையானது பகுத்தாய்ந்து முடிவெடுக்கு முன்னரே உடனடியாக வினையாற்றும்படி மூளைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லது அதற்கேற்ப மூளையானது பதனப்பட்டுள்ளது எனலாம்.

வாழ்வா சாவா என்பது போல

மூளையின் மற்றொரு பகுதியையும் குழந்தையின் அழுகுரல் எழும்போது பரிசோதித்தார்கள். இது மூளையின் sub-cortical area எனும் பகுதியாகும். இது எதற்கு முக்கியமானது.

திடீரென ஒருவன் கத்தியை ஏந்தியபடி உங்களைக் குத்த வருகிறான் என வைத்துக் கொள்ளுங்கள். இது மிக அச்சமூட்டக் கூடிய கணம். கரணம் தப்பினால் மரணம் என்பது போல உயிராபத்தை ஏற்படுத்தும் தருணம். ஒரு நிமிடம் தாமதித்தாலும் பேராபத்து ஏற்படும்.
நீங்கள் என்ன செய்வீர்கள்.? தப்பி ஓட முயல்வீர்கள். அல்லது கத்திக் குத்தைத் தடுக்க முயல்வீர்கள்.

இங்கு நீங்கள் சிந்தித்துச் செயற்படுவதில்லை. உங்களை அறியாமலே உடனடியாச் செயற்படுவீர்கள். உணர்ச்சி வயப்பட்டு உறுதியாகச் செயற்படாது தாமதிக்கும் விடயமல்ல. fight-or-flight response என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். மூளையானது உடனடியாக எச்சரிக்கை நிலைக்குத் தள்ளப்படும். உடனடியாகவும், தருணத்திற்கு ஏற்பவும் உங்களையறியாமல் செயற்பட ஆரம்பிப்பீர்கள்.

எத்தகைய தருணத்தில் ஒருவர் உடனடியாகவும் திறமையாகவும் செயற்படுகிறார் என்பதை அறிய whack-a-mole என்ற விளையாட்டை ஆட வைத்தார்கள். மற்றெந்த அழுகுரலையும் விட குழந்தையின் அழுகையின் பின்னர் ஆய்விற்கு உட்பட்டவர்கள் மிக சிறப்பாக அந்த விளையாட்டை ஆடினார்கள்.

இது ஏன் எனில் குழந்தையின் அழுகுரலானது கேட்பவரது உடலை எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்து பாதுகாப்பு அல்லது பாரமரிப்பு அளிப்பதற்குத் தயாராக்குகிறது.

இதனால்தான் குழந்தையின் குரலை எங்கு எப்பொழுது எத் தருணத்தில் கேட்டாலும் நம்மால் அலட்சியம் செய்ய முடிவதில்லை ஏதாவது செய்யத் தூண்டுகிறது.