போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, அதை பள்ளியில் சேர்க்க அட்மிஷன் வாங்கிவிடுகின்றனர். இரண்டரை வயது குழந்தைக்கு கூட பல்லாயிரக்கணக்கில் பள்ளிக்கட்டணம் இருக்கிறது. ஆனால் என்ன தான் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும் சில பெற்றோர்கள் எதற்கும் அசருவது இல்லை. கடனை வாங்கியாவது பள்ளிக்கட்டணத்தை செலுத்திவிடுகிறார்கள்.
பல பள்ளிகள் இரண்டரை வயதுக்கு குறைவான குழந்தைகளை கூட சேர்த்துக்கொள்கின்றன. ஆனால் இந்த வயது உங்கள் குழந்தை பள்ளிக்கு செல்லத் தயாராகிவிட்டது என்பதற்கான அர்த்தம் அல்ல.
நிறைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனே பள்ளியில் சேர்த்துவிட ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் ஆய்வாளர்கள் மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது தவறு என கூறுகின்றனர்.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சரியான வயது 6 என்றும், ஏழு வயதில் தான் குழந்தைகள் எதையும் புரிந்து கொண்டு செயல்படும் திறனை பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
உளவியல் மருத்துவர்கள், “சுயக்கட்டுப்பாடு என்பது முக்கியமான ஒன்று. இது குழந்தைகளுக்கு ஏழு வயதில் தான் வரும். மேலும் இந்த வயதில் தான் குழந்தைகளுக்கு கவனம் மற்றும் சிறந்த செயல்பாடுகள் உண்டாகும்” என்று கூறுகின்றனர். குழந்தைகளை சிறு வயதிலேயே பள்ளியில் சேர்ப்பதால், மனநிலை மாற்றம் ஏற்பட்டு, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.