Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்! தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்! தடுப்பது எப்படி?

31

தேச மற்றும் சர்வதேச அரங்கில் தமிழகத்துக்கென்று தனியிடம் உண்டு. பண்பாட்டால், கலாசாரத்தால், பாரம்பரியத்தால் மாறுபட்ட தமிழகம் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஆனால் பெண்ணியம் போற்றும் தமிழகத்தின் நிலையை இன்றைக்கு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம். பெண்களை தெய்வமாய் போற்றும் நம் மாநிலத்தில், பெண்களுக்கு எதிராக அரங்கேறும் நிகழ்வுகள் நாம் கட்டி காத்து வரும் பாரம்பரியத்தை, கலாசாரத்தை சீர்குலைப்பதாக இருக்கிறது. அதிலும், உலகம் அறியா குழந்தைகளும் பாலியல் ரீதியாக சீண்டப்படுவது, சிதைக்கப்படுவது வேதனையின் உச்சம்.

சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினி, மெத்த படித்த காமுகனின் காம பசிக்கு இரையாக்கப்பட்ட துயரம் தமிழகம் மட்டுமின்றி தேசம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பசியை தீர்த்துக்கொண்ட அந்த கயவன், சிறுமியை கொடூரமாக கொலையும் செய்தான். சிறை சென்று வெளியே வந்த அவன் தன் தாயையும் கொன்றது வேறு கதை.

இதனால் ரணமான இதயம் இன்னும் ஆறவில்லை. அதற்குள் (சில நாட்களுக்கு முன்பு) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் 4 வயது குழந்தையை இன்னொரு வாலிபன் பலாத்காரம் செய்து கொன்றுள்ளான். அடுத்த ஒரு, சில நாட்களில் அதே மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் மூன்று வயது குழந்தையை முதியவர் சீரழித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து தொடரும் இதுபோன்ற சம்பவங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகத்தை தரவும் தவறவில்லை. இவையெல்லாம் தமிழகம் மீது படிந்த, படியும் அகற்ற முடியா கறை. தமிழகத்துக்கு வந்த அவமானம், தலைகுனிவு.

பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொல்லப்படுவது தமிழகத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு துளியும் இல்லை என்பதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. இப்படியொரு நிலை, நம் தேசம் முழுமைக்கும் அடியெடுத்து வைத்து இருக்கிறது. அதாவது, கடந்த ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதில் கணிசமான குற்ற நிகழ்வுகள் தமிழகத்திலும் நடந்து இருக்கின்றன.

வெளிச்சத்துக்கு வந்துவிட்ட குற்றங்கள் தவிர்த்து, இன்னும் கவுரவத்துக்காக மூடி மறைக்கப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகம் உண்டு. எங்கே போய்கொண்டிருக்கிறது சமூகநியதிகளும், நீதியை நிலைநாட்டும் சட்டங்களும்? பச்சிளம் குழந்தைகளை தம் இச்சைக்கு இரையாக்கும் கயவர்கள் சட்டத்தின் ஓட்டைகள் வழியாக ஊடுருவி எளிதில் வெளிவந்து விடுகிறார்களே? சிறுமி ஹாசினியை கற்பழித்து, கொன்ற வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி பாதியிலேயே சிறையில் இருந்து வெளிவந்து விட முடியும் என்றால், போலீசும், சட்டமும் இருந்து என்ன பயன்?

குழந்தையும், தெய்வமும் ஒன்று என்று கொண்டாடும் நம் சமூகத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது எத்தனை, எத்தனை வேதனை. புன்னகைக்கும் குழந்தைகளை போகப்பொருளாக பார்ப்பது தமிழ் சமூகத்துக்கே வந்த இழுக்கு அல்லவா? இதுபோன்ற துயர, அவமானகர, அபாயகர நிகழ்வுகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சமூகம் இருப்பதை புறந்தள்ளிவிட முடியாது.

இதற்கு அரசின் பங்கு மிக முக்கியமானது. ஆபாச படங்களை அள்ளித்தரும் இணையங்களை இழுத்து மூட வேண்டும். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாச காட்சிகள் இடம்பெறாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மதுவினால் தான் குற்றங்கள் பன்மடங்கு பெருகுகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே, மதுவில்லா தமிழகத்தை பிரசவிக்க உடனடியாக தமிழக அரசு முன்வர வேண்டும்.

தவறு செய்யும் காமுகர்கள், கயவர்களை சட்டத்தின் பிடி ஒருபோதும் தப்புவிக்க கூடாது. இதற்கு வலுவான ஆதாரங்கள், சாட்சியங்கள் மூலம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை பெற்றுத்தர போலீஸ் துறை முன்வர வேண்டும். குழந்தைகளை சீண்டினால் ஒருபோதும் சிறைவாசம் விடாது என்பதை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.

இதில் பெற்றோருக்கு இருக்கும் பங்கும் அதிமுக்கியம். வாழ்க்கை என்றால் என்னவென்று கற்றுத்தராமலும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் குழந்தைகளுக்கு புகட்டாமலும் பணத்தை மட்டும் நாடி என்ன பயன்? ஒவ்வொரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே நல்ல செயல்களை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். யாரிடம் எப்படி பழக வேண்டும்? யாரிடம் விலகி நிற்க வேண்டும்? என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் எது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைவரையும் தன் உறவினர்களாக, குடும்பத்தில் ஒருவராக பாவிக்கும் பண்பை சிறு வயதில் குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும்.

பெற்றோர், சமூகம், சட்டம், அரசு தன் கடமையை செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தடுக்க முடியும். தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க முடியும். இனியொரு விதி செய்வோம். குழந்தைகளை காப்போம்.