Home குழந்தை நலம் குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

குழந்தைகளின் ஈ.என்.டி. பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி?

25

Captureகாது :

குழந்தைகளுக்கு காது வலி தனியாக வருவதில்லை. சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போது காதுவலி, காது அடைப்பு மற்றும் சீழ் வடிதல் ஏற்படும். சளி இல்லாத போதும் கூட குழந்தைகளுக்கு தாங்க முடியாத காதுவலி உண்டாகலாம். பெற்றோர் அடிக்கடி குழந்தைகளின் காதை சுத்தம் செய்வதால் ஏற்படும் எழுச்சி எனப்படும் கட்டி, குருமி ஆகியவற்றால் குழந்தைகளுக்கு கடுமையான காதுவலி ஏற்படலாம். குழந்தைகளின் காது சவ்வு மிகவும் சன்னமாகவும் மிருதுவாகவும் இருக்கும். காதில் அடித்தாலோ ‘சவ்வு கிழிதல்’ ஏற்பட்டு நோய்த் தொற்றுப் பரவலாம்.

அதிக காய்ச்சலாலும் குழந்தைகளின் காது கேட்கும் திறன் குறையக்கூடும். பட்ஸ் பயன்படுத்தி காதில் உள்ள அழுக்கை எடுக்க முயற்சிப்பதாலும் கேட்கும் திறன் குறையலாம். காதுகளை மென்மையாகப் பராமரிக்க வேண்டும். குழந்தைக்கு காது வலிக்கிறது என்பதற்காக காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது தவறு. அந்தப் பழக்கம்கூட குழந்தைக்கு ஆபத்தை விளை விக்கும்.

மூக்கு :

பள்ளி செல்லும் குழந்தைகளும் வீடு அருகே விளையாடும் குழந்தைகளும் புறச்சூழல் காரணமாக அலர்ஜி மற்றும் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள். சளித்தொல்லையால் அவதிப்படுவார்கள். மூக்குப்பகுதியில் நமைச்சல் போலத் தோன்றும். அதனால் ஏற்படும் மூக்கடைப்பு, நீர்வடிதல் போன்ற பிரச்னைகளால் சாப்பிடும் உணவை விழுங்க முடியாமல் தவிப்பார்கள்.

தூங்கும்போதும் மூக்கடைப்பு ஏற்படுவதால் வாயால் மூச்சு விடுவார்கள். தொண்டை வறண்டு அடிக்கடி தாகம் எடுக்கும். அதனால் போதுமான தூக்கமும் உணவும் இல்லாமல் சோர்ந்து காணப்படுவார்கள். காது, மூக்கு, தொண்டைப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக இருப்பதால் சளி அதிகரிக்கும்போது மூன்றிலும் நோய்த்தொற்றுப் பரவும்.

சில குழந்தைகளுக்கு ‘சில்லி மூக்கு உடைதல்’ பிரச்னை ஏற்படலாம். பள்ளியில் மற்ற குழந்தைகளுடன் விளையாடும்போது எங்காவது இடித்துக்கொண்டு மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் வெளிப்படும்.

அதிக வெப்பம், வேதிப்பொருள், அடிக்கடி சளிப்பிடித்தல், குழந்தைகள் விரலால் மூக்கை நோண்டுதல் ஆகிய காரணங்களால் மூக்கின் சிறு ரத்தக்குழாய்களில் ரத்தம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. இதைப் பார்த்து குழந்தைகள் பயப்படுவார்கள். இந்தப் பிரச்சனை உள்ள குழந்தைகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும்.

தொண்டை :

சில நேரங்களில் தொண்டையில் ஏற்பட்ட வலியால் குழந்தை எச்சிலை விழுங்கக்கூட சிரமப்படும். டான்சில் கட்டி இன்ஃபெக்ஷனால் காய்ச்சல் ஏற்படலாம். முறையாக பதப்படுத்தப்படாத உணவுகள், குளிர்பானங்களை உட்கொள்வதாலும் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்படும். சாலையோர குளிர்பானம், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றில் கிருமி இருந்தால் தொண்டைப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு தொந்தரவு செய்யும்.

குரல்வளை மற்றும் மூச்சுக்குழாய் பகுதியில் விஷக்கிருமிகள் சேருவதால் இருமல், குரல் மாற்றம், மூச்சுத்திணறல் ஆகியவற்றால் குழந்தைகளின் சுவாசம் தடைபட்டு உயிருக்கே ஆபத்து ஆகலாம். தொண்டையில் சிறு பிரச்சனை உருவாகும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் விரைவில் தீர்வு காணலாம்.

கவனம் தேவை :

பள்ளி செல்லும் குழந்தைகளை இந்தப் பிரச்சனையிலிருந்து பாதுகாப்பதில் பெற்றோர், ஆசிரியர் – இருதரப்பினரும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். காதிலோ, மூக்கிலோ நுழைக்கும்படியான, வாயில் போட்டு விழுங்கும்படியான பொருட்களை குழந்தைகள் கைகளில் வைத்திருக்க அனுமதிக்கலாகாது.

சில குழந்தைகள் கையில் கிடைக்கும் மணி, பென்சில், சாக்பீஸ், கடலை, காசு, கற்கள் ஆகியவற்றை காது, மூக்கு அல்லாது வாயில் போட்டுக் கொள்வார்கள். சிலர் அருகில் உள்ள குழந்தையின் காது, மூக்கு, வாயில் போட்டு விடுவார்கள்.

காது, மூக்கில் பொருட்களை போடும் போது அடைப்பு, ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். வாயில் போட்டு விழுங்கும் போது காசு, கொட்டை வகைகள் போன்றவை உணவுக் குழாய் மற்றும் மூச்சுக் குழாயில் சென்று அடைபடும். மூச்சுக்குழாயில் சென்று அடைக்கும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து.

சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், காதுவலி, தொண்டை வலி போன்றவை வராமல் பாதுகாக்க வேண்டும். அவற்றைக் கண்டுகொள்ளாமல் விடுவதால் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்படும். பனி, மழைக்காலங்களில் அதற்கான உடைகளை அணிவித்துப் பாதுகாக்க வேண்டும்.

தூசு மற்றும் அசுத்தமான சுற்றுப்புறத்தால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் கவனமாகப் பார்க்க வேண்டும். ஈ.என்.டி. பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அதன் மூலம் மிகப்பெரிய அபாயங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.