Home குழந்தை நலம் குட்டீஸ் பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

குட்டீஸ் பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

36

குட்டீஸ், நீங்கள் ரொம்ப ரொம்ப புத்திசாலிகள் தானே!. உங்களுக்கு எந்த நேரத்தில் எப்படி பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்று பெற்றோர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் இல்லையா? அவர்கள் சொல்படி கேட்டு நீங்களும் சமர்த்தாக நடப்பீர்கள் அப்படித்தானே. ஆனால் ஆபத்துகள் திடீரென நம்மை ஆட்கொள்பவை.

சுற்றி இருப்பவர்களாலும், கவனக்குறைவாலும் ஆபத்து வரலாம். எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அவை மோசமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். நீங்கள், கவனமாக, காயமின்றி பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடி இருப்பீர்கள், அதுபோலவே பல்வேறு சமயங்களில் எப்படி பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கே அறிவோம்…

* உங்களுக்கு சாக்லெட்டும், பொம்மைகளும் ரொம்ப பிடிக்கும்தானே. ஆனால் பெற்றோர் வாங்கித் தரும்போது மட்டும் அவற்றை வாங்கிக் கொள்ள வேண்டும். சாக்லெட்டை ருசித்து, பொம்மைகளுடன் விளையாட ஆனந்தப்பட வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் யாரும் சாக்லெட் உள்ளிட்ட தின்பண்டங்கள் கொடுத்தாலோ, பொம்மைகள் போன்ற பரிசுகள் தந்தாலோ வாங்கக் கூடாது. ‘அம்மா எனக்கு தினமும் சாக்லெட் தருவார், எங்கள் வீட்டில் நிறைய பொம்மை இருக்கிறது’ என்று மறுத்துவிடுங்கள்.

தெரிந்தவர்கள் என்றாலும் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பிறந்த நாள் விழா, மற்றும் உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது மற்றவர்கள் தரும் பரிசுகளை பெற்றோர் அனுமதியுடன் வாங்கிக் கொள்வதில் தவறில்லை. அதுவே உங்களுக்குப் பாதுகாப்பானது. ஏனெனில், உலகில் காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 80 சதவீதம் பேர், ஆசை காட்டி ஏமாற்றப்பட்டே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பாதுகாப்பாக செயல்படுவது புத்திசாலித்தனம். இனி யாரும் எதையாவது கொடுத்தால் வாங்கமாட்டீர்கள்தானே?

* பள்ளி நேரத்தில் பாதுகாப்பாக வகுப்பறையில் இருக்க வேண்டும். அவசியமின்றி வகுப்பறை மற்றும் பள்ளியை விட்டு வெளியேறக்கூடாது. முன்பின் தெரியாதவர்களிடம் பேச்சு கொடுத்து அவர்களுடன் செல்வது, வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியில் சுற்றுவது போன்றவை ஆபத்தானவை.

* விளையாடும்போதும் அதிக கவனம் தேவை. ஒவ்வொரு விளையாட்டுக்கான விதிமுறைகள், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி விழிப்புடன் விளையாட வேண்டும். உதாரணமாக கிரிக்கெட் விளையாடினால் ஹெல்மெட் அணிந்து கொள்ள வேண்டும், கால்பந்து ஆடும்போது நல்ல காலணி அவசியம். முகம், தலை, அந்தரங்க பகுதிகளில் பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓடி விளையாடுவது, மரம் ஏறி விளையாடுவது போன்ற சமயங்களில் காயம் ஏற்படாத வகையில் எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

* கருவிகளை உபயோகிக்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிளேடு, கத்தி, கத்தரிக்கோல், சுத்தியல் ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும். கவனமின்றி செயல்பட்டால் கைகளை பதம் பார்த்துவிடும். கருவிகளை பயன்படுத்தும்போது அவசியமான முதலுதவி பொருட்கள் அருகில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது புத்திசாலித்தனம்.

* சாப்பிடக்கூடாத பொருட்களை வாயில் வைத்து கடிக்கக்கூடாது. உதாரணமாக ஷாம்பு, சோப்பு, கொசுமருந்து, வீட்டை சுத்தப்படுத்தும் ரசாயனப் பொருட்கள் போன்றவற்றை அவசியமின்றி கையில் வைத்து விளையாடவோ, வாயில் வைத்து கடிக்கவோ கூடாது. ஏனெனில் இதுபோன்ற பொருட்களில் உடலுக்கு தீங்கான ரசாயனப் பொருட்கள் இருக்கும். சிலவற்றில் ஆபத்தான விஷப் பொருட்களும் இருக்கிறது. எனவே இவற்றை எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.