Home குழந்தை நலம் குட்டிக்குழந்தைக்கு விக்கல் எடுக்குதா?

குட்டிக்குழந்தைக்கு விக்கல் எடுக்குதா?

33

விக்கல் என்ற விசயம் சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். அதுவும் குழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் ஏதாவது தூசியையோ, சிறு நூலினையோ தலையை சுற்றி உச்சஞ்தலையில் வைப்பார்கள். அதெல்லாம் மூடநம்பிக்கை என்று கூறும் நிபுணர்கள் விக்கல் ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை நீக்குவதற்கான வழிமுறைகளையும் கூறியுள்ளனர்.

நாம் சுவாசிக்கும் போது மார்புத்தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் சுவாசப்பைகளை ஒட்டி உள்ள உதரவிதானமும் விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல் நாண்கள் திறக்கின்றன. இப்போது மார்புக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் மார்புக்குள் காற்று எளிதில் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால், நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி சுவாசப்பைகளுக்குள் நுழைந்துவிடுகிறது. இது இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.சில நேரங்களில் குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று தொண்டையில் உள்ள குறுகிய இடைவெளி வழியாக சுவாசப்பைகளுக்குள் நுழைய வேண்டியிருக்கிறது. அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது தொண்டையில் ‘விக்..’ என்று ஒரு வினோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

ரிலாக்ஸ் செய்யுங்கள்

விக்கலால் அவதிப்படும் குழந்தையை ரிலாக்ஸ் ஆக தட்டிக்கொடுக்கலாம். பசியினால் சில குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கலாம். திடீர் விக்கல்களை நிறுத்த சிறிதளவு தண்ணீர் கொடுக்கலாம். இது விக்கலை நிறுத்த உதவும்.

பால் புகட்டும் போது விக்கல் எடுத்தால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை நிறுத்தி விடவும். இல்லை எனில் அது மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடும். சின்னக்குழந்தைகள் உறங்கிக் கொண்டிருக்கும் போது விக்கல் எடுக்கும் அப்போது தேனை நாக்கில் தடவி வைக்கலாம். அரோமா தெரபியின் மூலம் விக்கலை நிறுத்தலாம். சிறிதளவு எண்ணெயை எடுத்து டிஸ்யூ காகித்த்தில் தடவி அதனை குழந்தைகளின் நெஞ்சில் வைக்கலாம்.

பள்ளிக்குச் செல்லும் குழந்தையாக இருந்தால் ஒரு காகிதப்பையை எடுத்துக்கொண்டு, மூக்கு, வாய் இரண்டும் உள்ளே இருக்கு மாறு இறுக்கிப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். இப்போது மூச்சை உள் இழுத்து, அந்தக் காகிதப்பைக்குள் மூச்சை விடச் சொல்லுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால் படிப்படியாக ரத்தத்தில் கரிய மில வாயுவின் அளவு அதிகரித்து, பிராணவாயுவின் அளவு குறையும். அப்போது விக்கல் நின்று விடும்.

மனநோய் விக்கல்

சிலருக்கு மனநோய் காரணமாகவும் விக்கல் வரும். இதற்கு ‘ஹிஸ்டிரிக்கல் விக்கல்’ என்று பெயர். பொதுவாக பள்ளிக்கு அல்லது தேர்வுக்குப் பயப்படும் குழந்தைகளுக்கு இந்த வகை விக்கல் வரும். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த விக்கல் உள்ள குழந்தைகள் தூங்கினால் விக்கல் நின்று விடும். கண் விழித்ததும் விக்கல் தொடங்கிவிடும். இவையெல்லாம் சாதாரண காரணங்கள். இதனால் அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

அடிப்படை நோய் எதுவும் இல்லாமல் ஒருவருக்கு விக்கல் உண்டானால், அதை நிறுத்துவது எளிது. அவருடைய ரத்தத்தில் கரியமிலவாயுவின் அளவை அதிகரித்தால் விக்கல் நின்றுவிடும்.

சிலருக்குத் தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஆரஞ்சுப் பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால் விக்கல் நிற்கும். குழந்தைகளுக்குக் ‘கிரைப் வாட்டர்’ கொடுத்தால் விக்கல் நிற்கும்.விக்கல் எடுப்பது இயல்பானது, சாதாரணமானதுதான். அதை நினைத்து அச்சம் கொள்ளவேண்டாம். என்கின்றனர் நிபுணர்கள்.

அதிக விக்கல் ஆபத்து

ஒருவருக்கு இரண்டு மூன்று நாள்களுக்கு மேல் அதாவது 48 மணிநேரத்திற்கு மேல் விக்கல் தொடருமானால், அது ஆபத்தான அறிகுறி என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். இதுபோல் உதரவிதானத்தில் நோய்த்தொற்று, இரைப்பைப் புண், இரைப்பைப் புற்றுநோய், கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடலடைப்பு, மூளைக்காய்ச்சல், பெரினிக் நரம்புவாதம், சர்க்கரை நோய் முற்றிய நிலை, மாரடைப்பு போன்ற காரணங்களாலும் விக்கல் வரும். எனவே அதிக விக்கலை நிறுத்த மருத்துவரை அணுகவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.