உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதத்திற்கு கொடுக்க வேண்டும். ஆனால் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கால்களுக்கு யாரும் கொடுப்பதில்லை. பாதங்களை அக்கறையாக பராமரிப்பது அவசியம். வெளியில் சென்று வீட்டிற்குள் வருவதற்கு முன் கால்களை நன்கு கழுவி விட்டு வர வேண்டும்.
பாதங்கள் மற்றும் உள்ளங்கைகள் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இதனால் பாதங்களை குளிர்ந்த நீரால் கழுவும் போது வெயிலில் அலைந்து விட்டு வருவதால் ஏற்படும் சூடு தணிகிறது.
தினமும் இரவு படுக்கும் முன் கால்களை நன்கு கழுவி துடைத்துக் கொண்டு படுக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் காலில் வெடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாது. குதிகால் பகுதிகளில் கடினமாகியிருக்கும் தோல்(டெச் செல்) பகுதியை பியூமிஸ் கற்கள் கொண்டு தேய்த்து அகற்ற வேண்டும்.
அவ்வப்போது, நகங்களை வெட்டி விட வேண்டும். கால்களுக்கு இதமான செருப்புகளை அணிய வேண்டும், குதிகால் உயர்ந்த செருப்புகளை அத்தியாவசியமான நேரங்களில் மட்டுமே அணிய வேண்டும். மற்ற நேரங்களில் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் குதிகால் உயர்ந்த செருப்பை அடிக்கடி பயன்படுத்தினால் முதுகுவலி ஏற்பட காரணமாகும்.. 50 வயதை அடைந்தவர்களின் தோல் மிகவும் மெல்லியதாகி மென்னையாகி விடும். எலும்புகளும் பலவீன மடைந்திருக்கும்.
எனவே அவர்கள் இதமான எடை குறைந்த செருப்பை தேர்வு செய்வது அவசியம். குளிர் காலங்களில் வெறும் கால்களால் கிரானைட், மார்பிள் தரைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்.
சிலரது உடல் தொட்டால் ஜுரம் அடிப்பது போல சுடும். இவர்கள் இரவு படுக்கும் முன் உள்ளங்கால்களில் நல்லெண்ணெய் தடவி படுத்தால் உடல் சூடு, கண்களில் எரிச்சல் குறையும்.