காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது பாஸ். காதல் என்பது… காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் சொல்கிறார்.
ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும். காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு. காதலை ஒழிக்க வேண்டும். காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், காதலர்தினமும் நெருங்கி வரும் வேளையில் காதலைப்பற்றிய விரிவான விவாதம் தேவை என்று கருத வேண்டியுள்ளது.
காதல்ன்னா என்ன? எப்படி காதலிக்கலாம்?
முதலில் காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடா என்று பார்க்கவேண்டியுள்ளது. இப்படிப் பேசுபவர்கள் தமிழ்நாட்டின் அரிச்சுவடியேதெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றில்காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு. தமிழ் இலக்கியங்களில்காதலைப் பற்றிப் பேசப்படாத, காதலைப் போற்றாத ஒருஇலக்கியத்தைக் கூட பார்க்க முடியாது. தமிழ் இலக்கியங்களில்அகநானூறு என்ற இலக்கியம் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றி,காதலைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது.
தமிழ் இலக்கியங்களில் உள்ளது அதனால் காதலிக்க வேண்டும்என்று பேச வரவில்லை. இலக்கியங்களில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனின் உணர்விலும்காதல் தோன்றியே தீரும். காதலை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால்அந்த உணர்வுக்கு காதல் என்ற பெயரை வைக்காமல் வேறுபெயரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் காதல் என்ற உணர்வுக்கு யாராலும் எதிர்வினையாற்றமுடியாது.