Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப கால தாம்பத்தியம் பற்றி சில ஆலோசனை

கர்ப்ப கால தாம்பத்தியம் பற்றி சில ஆலோசனை

46

கர்ப்ப காலத்தின் போது அனைத்து தம்பதிகளுக்கும் தோன்றும் கேள்வி கர்ப்பத்தின் போது உறவு வைத்து கொள்ளலாமா, வைத்து கொண்டால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படுமா என பல சந்தேகங்கள் தோன்றுகிறது. பொதுவாகவே கர்ப்ப கால உறவு என்பது பல தம்பதிகளும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும்.

கர்ப்பகாலத்தின் போது தம்பதியர் உறவில் ஈடுபடுவதால் ஒரு சில நன்மைகளும் இருக்கிறதாம். உறவினால் தாயின் உடலில் ஹார்மோன் சுரப்பது அதிகரித்து அதனால் சேய்க்கு நன்மை ஏற்படுகிறதாம். அதனால் கர்ப்பகாலத்தில் தாய்க்கு எழும் எதிர்மறை உணர்வுகள் படிப்படியாக குறைகிறதாம். உறவின் மூலம் ஆணிடம் இருந்து வெளியாகும் prostaglandin ஹார்மோன் பெண் உறுப்பினை மென்மையாக்குகிறதாம்.

இதனால் எளிதில் பிரசவமாகிறது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு அல்லது சில நாட்களுக்கு முன்பு தம்பதியர் பாதுகாப்பாக உறவு கொள்வதனால் பெண்ணுக்கு ஏற்படும் ஆர்கஸம் பிரசவத்தை எளிதாக்குகிறது என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஒரு பெண் தான் தாய்மை அடைந்திருப்பதை உறுதி செய்த உடன் மருத்துவர் கூறும் முதல் அறிவுரை முதல் மூன்று மாதங்களுக்கு எதுவும் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதுதான். ஏனெனில் முதல் மூன்று மாதம்தான் கர்ப்பத்தின் முக்கிய காலக்கட்டமாகும். இந்த சமயத்தில் கர்ப்பத்தின் உறுதித்தன்மை குறைவு. ஆகையால்தான் முதல் மூன்று மாத காலத்திற்கு உடலுறவு வேண்டாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

முதல் மூன்று மாதத்திற்குப் பின் பெண் சம்மதித்தால் உறவில் ஈடுபடலாம் அதில் தவறு ஏதும் இல்லை என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைந்தே காணப்படும். ஆனால் மிகவும் எச்சரிக்கையாக உடலுறவு கொள்ள வேண்டும். முன்பு உறவு கொண்ட மாதிரி முரட்டுத்தனமாக இருக்கக் கூடாது.

பெண்களின் வசதிகளுக்கேற்ப மிகவும் வசதியான நிலையில் இருக்கும் போது உடலுறவு கொள்ளல் வேண்டும். ஆணின் உடல் எடை எந்த வகையிலும் பெண்ணை அழுத்தக் கூடாது ஏனெனில், அந்த அழுத்தம் வயிற்றில் இருக்கும் சிசுவை பாதிக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிக உணர்ச்சிவயப்படுதலோ, அதிக நேரம் உடலுறவு கொள்வதோ பெண்ணை சீக்கிரம் களைப்படையச் செய்து விடும். அதனையும் கவனத்தில் கொள்வது மிக அவசியம்

கூடுமானவரை பாதுகாப்புடன் உறவு கொள்வது பிறக்கப் போகும் குழந்தையின் உடல் நலத்தை பாதுகாக்க வழி செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், உறவின் போது பெண்ணின் கர்ப்ப வாயில் ஏதேனும் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தற்போது மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

8 அல்லது 9வது மாதங்களில் உடலுறவுக் கொள்ளும் போதுதான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உடலுறவுக் கொள்வது உடலுறுப்புக்களை தளர்த்தியாக வைக்க உதவுகிறது.

எனினும், சிலருக்கு கர்ப்பப் பை பலவீனமாக இருப்பதாகவும், சிலர் படுத்த நிலையிலேயே கர்ப்ப காலத்தைக் கழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தால் அவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே உறவில் ஈடுபடவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.