Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா?

33

Captureகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் அவர்களுக்கு உணவு சம்பந்தப்பட்ட மாறுதல் மற்றும் பசி போன்றவை மிக இன்றியமையாதது. இந்த 9 மாதங்களில், ஒரு பெண் எந்தவித உணவுக்கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல், தன் உடல் எடை அதிகரிப்பது பற்றி அதிகம் கவலைப்படாமல், நல்ல உணவை விரும்பி உண்கின்றாள்.

ஒரு தாயானவள் சத்துக்கள் நிறைந்த உணவை அதிகம் உண்பது அவளுடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். ஏனெனில் ஒரு தாய் உட்கொள்ளும் உணவானது அவளுடைய வருங்காலக் குழந்தைக்கு தேவையான ஆரோக்கியத்தை தரும் அருமருந்தாகும். எனவே ஒரு தாய் உட்கொள்ளும் எந்த ஒரு உணவும் அவளுடைய குழந்தையை நேரிடையாக பாதிக்கின்றது.

ஒரு கர்ப்பிணி பெண் உட்கொள்ளும் உணவு மூலம் அவளுக்கு கிடைக்கும் சத்துக்கள் கர்ப்பத்தில் உள்ள அவளுடைய குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் கிடைக்கின்றது. எனவே, ஒரு கர்ப்பிணிப் பெண் அவளுடைய சாப்பாட்டில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.

ஒரு சில உணவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஆயினும் சில உணவுகள் தாய்க்கும் அவளுடைய கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியத்திற்கும் அச்சுறுத்தலை தரவல்லது.

பருவ கால பழங்களில் மிகவும் சிறந்ததான மாம்பழங்களில் பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஏ, மற்றும் பி6 போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன. வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை ஒரு கர்ப்பிணி பெண் மற்றும் அவரது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எவ்வுளவு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும்.

இதைத் தவிர மாம்பழங்கள் கர்ப்பிணிப் பெண்ணிற்கு வலுவான நோய் எதிர்ப்பு அமைப்பைத் தருகின்றது. மாம்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளன.

மாம்பழங்கள் செரிமானத்திற்கு உதவும். எனவே இது கர்ப்ப காலத்தில் தோன்றும் சில செரிமானம் சம்பந்தப்பட்ட நோய்களான மலச்சிக்கல் போன்றவற்றை தீர்க்க உதவும். ஏனெனில் மாம்பழத்தில் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

கர்ப்ப காலத்தில் இனிப்பை அதிகம் விரும்பும் பெண்களுக்கு ஒரு சிறந்த மற்றும் இயற்கையான மாற்றுப் பொருளாக மாம்பழம் உள்ளது. இதன் மூலம் உடல் பருமன் மற்றும் அஜீரணம் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எனவே, இது ஒரு கர்ப்பிணி பெண் எந்தவித பயமும் இன்றி மாம்பழங்களை சாப்பிடலாம் என்று உறுதியாகச் சொல்லலாம்.

மாம்பழங்களில் அதிக அளவில் சர்க்கரை உள்ளதால் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயால் அவதிப்படும் பெண்கள் மாம்பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

கல் வைத்து அல்லது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே நீங்கள், இயற்கையாக விளைந்த மற்றும் தானாகவே பழுத்த மாம்பழங்களை மட்டுமே வாங்க வேண்டும்.