கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பார்க்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் சில உணவுப் பொருட்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
அதே சமயம் ஒருசில உணவுப் பொருட்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும். உதாரணமாக பழங்களை எடுத்துக் கொண்டால், பப்பாளி, அன்னாசி போன்றவை குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. ஆனால் ஒருசில பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. உங்களுக்கு கர்ப்ப காலத்தில் என்ன பழம் சாப்பிடுவது நல்லது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அவகேடோவில் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய ஃபோலிக் ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மாம்பழம் சுவையானது மட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஏற்ற பழமும் கூட. ஏனெனில் இவை செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்வதுடன், இதில் வைட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது.
திராட்சையில் உடலின் மெட்டபாலிச அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இதனை கர்ப்பிணிகள் தொடர்ந்து சாப்பிடலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை சோர்வு, குமட்டல் மற்றும் பல பிரச்சனைகளை போக்க சாத்துக்குடி மிகவும் சிறந்தது.
மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. எலுமிச்சையும் சாத்துக்குடியைப் போன்றது தான். கர்ப்பிணிகள் இதனை அன்றாடம் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம்.