பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள். உச்சி முதல் நகக் கண் வரை ஒவ்வொரு உறுப்பிலும் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிற பருவம் கர்ப்ப காலம். எல்லா மாற்றங்களுமே மாறுதலுக்குட்பட்டவையே. சீக்கிரமே சகஜ நிலைக்குத் திரும்பக் கூடியவைதான்.
ஆனாலும், ஒரு விஷயம் கர்ப்பிணிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தக் கூடியது. அதுதான் கூந்தல் உதிர்வு. கர்ப்பத்தின் போதும் பிரசவமான உடனேயும் பெரும்பாலான பெண்கள் கூந்தல் உதிர்வை சந்திக்கிறார்கள். அதன் காரணங்கள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
‘‘கர்ப்ப காலத்தில் கூந்தலில் உண்டாகிற மாற்றங்கள் ரொம்பவும் இயல்பானது. சில பெண்களுக்கு கூந்தல் வழக்கத்தைவிட அதிகம் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். சிலருக்கு இதற்கு நேரெதிராக திடீரென கூந்தல் ஆரோக்கியமாக மாறுவதையும் பார்க்கலாம். ஒரு சிலருக்கு எந்த மாற்றமும் இன்றி அப்படியே இருக்கலாம். இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடலாம்.
ஒருவருக்கே கூட முதல் பிரசவத்தில் ஒரு மாதிரியும், அடுத்த பிரசவத்தில் வேறு மாதிரியும் இருக்கலாம். பொதுவாக கர்ப்பத்தின் கடைசி 3 மாதங்களில் கூந்தல் ஆரோக்கியமாக இருப்பதாகவே பலரும் உணர்கிறார்கள். இவை எல்லாவற்றுக்குமே காரணம் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள். கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் கூந்தல் வழக்கத்தைவிட அதிக அடர்த்தியாக இருக்கும். கூந்தலானது மாதத்துக்கு அரை இஞ்ச் அளவே வளரக்கூடியது.
கூந்தலின் வளர்ச்சியிலும் அடர்த்தியிலும் வியத்தகு மாற்றத்தை உணர ஒரு வருடமாவது தேவை. கர்ப்பத்தின் முதல் 3 மாத கூந்தல் வளர்ச்சிக்குக் காரணம் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜென் சுரப்பும், குறைகிற ஆன்ட்ரோஜென் சுரப்பும். இதன் காரணமாக கூந்தலின் வேர்ப் பகுதிகளில் சீபம் என்கிற எண்ணெய் சுரப்பானது குறைந்து, கூந்தல் முன்னைவிட அடர்த்தியாக இருப்பது போலத் தெரியும்.
இது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும் சீபம் குறைவதன் காரணமாக கூந்தல் வறட்சியும் அதிகமாகும். எனவே, கூந்தலை வறண்டு போகச் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். சொரியாசிஸ் பிரச்னை இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அது திடீரென காணாமல் போகலாம். அதுவும் தற்காலிகமானதே. பிரசவமானதும் அந்தப் பிரச்னை மீண்டும் திரும்பும்.
கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதன் காரணமாக கூந்தலானது வளர்ச்சி நிலையான அனாஜனில் அதிக நாட்கள் இருக்கும். அதனாலும் கூந்தல் வளர்ச்சி அதிகரித்தது போலத் தெரியலாம். பிரசவத்துக்குப் பிறகான கூந்தல் உதிர்வு என்பதை அனேகமாக எல்லா பெண்களுமே உணர்வார்கள்.
குழந்தை முகம் பார்த்து சிரிக்க ஆரம்பிக்கிற 3ம் மாதம் அப்படித்தான் முடி கொட்டும் எனப் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கலாம். இதற்குக் காரணமும் அதே ஹார்மோன் மாறுதல்கள்தான். பிரசவத்துக்கு முன்பு உச்சத்தில் இருந்த ஹார்மோன்கள் எல்லாம் குழந்தை பிறந்ததும் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்குவதே காரணம். கர்ப்ப காலத்தில் உதிர வேண்டிய முடிகள், பிரசவத்தின் போது மொத்தமாக கொட்டுவதைப் பார்க்கலாம்.
கூந்தலின் நுண்ணறைகள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்ளும் வேலையை முழுமையாகச் செய்து முடிக்கிற வரை, அதாவது, பிரசவத்தை அடுத்த 3-4 மாதங்களுக்கு இந்த முடி உதிர்வு சற்றே தீவிரமாகத்தான் இருக்கும். கொத்துக் கொத்தாக கையோடும் சீப்போடும் பிடுங்கிக் கொண்டு வருகிற முடிக் கற்றைகளைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. அது தற்காலிகப்பிரச்னையே… சில வாரங்களில் சரியாகி விடும்.
கர்ப்பம் என்றில்லாமல் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்புடன் தொடர்புடைய வேறு சில நிகழ்வுகளின் போதும் முடி உதிர்வுப் பிரச்னையை உணர்வார்கள் பெண்கள். ஹார்மோன் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை உபயோகிப்பதை திடீரென நிறுத்தும் போதும், கருக்கலைப்பின் போதும், உடலில் உண்டாகிற ஹார்மோன் சமநிலையின்மையின் போதும் முடி உதிர்வு அதிகரிக்கலாம்.
கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வைக் கண்டு பயந்து, அதை சரி செய்கிற முயற்சிகளாக கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்யக் கூடாது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் மற்றும் ஃபோலிக் ஆசிட், புரதம், தாதுச் சத்துகள் அடங்கியசப்ளிமென்ட்டுகளையும், காய்கறிகள், கீரைகள், பழங்களையும் சேர்த்துக் கொண்டாலே போதும்…’’