Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்ப காலக் கோளாறுகள்

கர்ப்ப காலக் கோளாறுகள்

37

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இரண்டாம் மாதத்தில் குமட்டலும் வாந்தியும் இருப்பது பொதுவாகவே சாதாரணமானது தான். இது ஒரு வகையில் கருவுற்றிருப்பதற்கான அடையாளமாகும். ஆனால் ஒரு சிலருக்கு வாந்தி அதிகமாக ஏற்பட்டுத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கு 5 கிராம் கிராம்பை எடுத்து தட்டி ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு 200 மி.லி. தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டுமளவுக்கு கஷாயமாக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ஸ்பூன் வீதம் சிறிது சர்க்கரையும் சேர்த்து மூன்று வேளை அருந்தினால் வாந்தி நின்றுவிடும்.

நீடித்த குமட்டலும் வாந்தியும் இருக்குமானால் கிராம்பு 10 கிராம், நெல்லிக்காய் வற்றல் 5 கிராம் எடுத்து இரண்டையும் தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று பெரிய தேசிக்காய் பழத்தின் சாற்றைப் பிழிந்து அரை நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு சாற்றை வடித்து விட்டு அடியில் தங்கியுள்ள வண்டலை எடுத்து மை போல அரைத்து அடையாகத தட்டி நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, குமட்டல் அல்லது வாந்தி ஏற்படும்போதெல்லாம் இந்த அடையில் சிறிது பிட்டு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் போதும், இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கூடச் செய்யலாம். குமட்டல் குணமாகும், அதே சமயம் ஜீரண சக்தியை அளிக்கும்.

மற்றொரு வகையில், முந்தின நாள் இரவு ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விட்டு அதில் இரண்டு ஸ்பூன் சுண்ணாம்பைப் போட்டு நன்றாகக் கலக்கி மூடி வைத்து விட வேண்டும். மறுநாள் காலை சுண்ணாம்பு நீர் நெளிந்திருக்கும். அதில் ஒரு ஸ்பூன் நீரை எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய சோயா பாலில் கலந்து ஒரு வாரம் தொடர்ந்து அருந்த வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற அனைத்துத் தொல்லைகளும் நீங்கும்.