கருப்பையிலே புற்று நோய் கட்டியாக வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத பைவ்ரோயிட் (Fibroid) எனப்படும் கட்டிகள் பற்றி அநேக ம்பேர் கேள்விப் பட்டு இருப்பீர்கள். இந்த பைவ்ரோயிட்(fibroid) எனப்படும் கட்டிகள் கருப்பைப் பையின் சுவற்றிலே இருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டியாகும்.
இது தனியாக இருக்கலாம் அல்லது ஒரு கருப்பையிலேயே பல கட்டிகள் இருக்கலாம். அதாவது 45வயதிலே இருக்கும் 100 பெண்களை எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட40 பேருக்கும் அநேகமானோருக்கு இந்த கட்டிகள் இருக்கலாம். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் இது அறிகுறிகளை வெளிக்காட்டாததால் நிறையப் பேருக்கு தங்களுக்கு இந்தக் கட்டிகள் இருப்பதே தெரியாமல் போய் விடுகின்றது.
பொதுவாக 40 தொடக்கம் 50 வயதளவிலேயே அதிகமான பெண்களுக்கு இது ஏற்பட்டாலும், இளம் பெண்களுக்கும் ஏற்படலாம். இது எல்லாப் பெண்களிலும் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை.
இவை அறிகுறிகளை ஏற்படுத்தும் பொழுது கீழ் வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.
• மாதவிடாய் நேரத்தில் அதிகம் ரத்தம் போகுதல்
• அடிவயிற்றிலே எதோ இருப்பது போன்ற உணர்வு
• அடிவயிறு வீங்குதல்
• அதிகம் சிறு நீர் கழிக்கவேண்டி ஏற்படுதல்
இது அறிகுறிகளை ஏற்படுத்தாத பெண்களிலே அகற்றப் பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதிகம் ரத்தம் போகுதல் போன்ற பிரச்சினை ஏற்படுமானால் இவை அகற்றப்படலாம். இது இரண்டு விதமாக அகற்றப்படலாம் .ஒன்று கருப்பைப் பையோடு சேர்த்து அகற்றுதல்(Hysterectomy) மற்றது கருப்பைப் பை இருக்க கட்டி மற்றும் அகற்றப்படுதல்(myomectomy). குறிப்பாக குழந்தை பெறுவதற்காக காத்திருக்கும் இளம் பெண்களில் கருப்பைப் பை இருக்க கட்டிகள் மட்டும் அகற்றப்படும்.