கருத்தரித்த பெண் அதிகம் சாப்பிட வேண்டியது மாதுளை. கர்ப்பக்கால வாந்தி, ரத்தசோகை, முதல் டிரைமஸ்டரில் சிலருக்கு ஏற்படும் ரத்தச் சொட்டுகள் என அனைத்துக்கும் மாதுளை தீர்வு அளிக்கும். காரணமற்ற வெள்ளைபோக்குக்கு, முளைகட்டிய வெந்தயக் கஞ்சி, உளுத்தங்கஞ்சி போதுமானது. கர்ப்பக்காலத் தொடக்கத்தில் ஏற்படும் ரத்தக்கசிவு, கருப்பையின் தேவையற்ற சுருக்கம் ஆகியவற்றுக்கு கொட்டையுள்ள கறுப்பு பன்னீர் திராட்சை நலம் அளிக்கும். தாமரைப் பூவும், தக்கோலமும், நெய்தல் கிழங்கும், செங்கழிநீர் கிழங்கும், கர்ப்பக்கால சங்கடங்களிலிருந்து மீள சித்த மருத்துவம் சொல்லும் மருத்துவ உணவுகள். ஃபோலிக் அமிலம் நிறைந்த, வலி நிவாரணி தன்மையுடைய, வைரஸ்களுக்கு எதிரான ஆற்றலுடைய, ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மையுடைய, இரும்பு மற்றும் கனிம சத்துகள் நிறைந்த இந்த மூலிகைகள், இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், தாய்-சேய் நலத்துக்கும் சுகப்பிரசவத்துக்கும் உதவக்கூடிய மிகச் சிறப்பான உணவுகள் பல கிடைக்கக்கூடும்.
வண்ணமுள்ள பழங்கள், கீரை, மீன், முட்டை, பால், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி கொண்ட உணவு, கர்ப்பிணிகளின் நலத்துக்கு மிக அவசியம். முருங்கைக் கீரையும் பாசிப் பருப்பு கலந்த பொரியலும் கேழ்வரகு அடையும் தரும் பயனை, விலை உயர்ந்த எந்த டானிக்குகளாலும் தர முடியாது. முன்பக்கம் சிறுநீர்ப்பையும் பின்பக்கம் மலக்குடலும் அழுத்தப்படுவதால் முறையே நீர்ச்சுருக்கமும் மலச்சிக்கலும் கர்ப்பக் காலத்தில் சர்வசாதாரணம். அதற்கு தினசரி நான்கு லிட்டர் தண்ணீர், அத்திப்பழம், வாழைத்தண்டு பச்சடி, கனிந்த வாழைப்பழம், தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி இரவில் கடுக்காய் பிஞ்சு சாப்பிட்டால், இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இன்று கர்ப்பக்காலத்தில் மட்டும் பெருகிவரும் சர்க்கரை நோயைக் (Gestational diabetes) கண்டு பதறத் தேவை இல்லை. தேவைப்பட்டால் உரிய மருத்துவமும், வெள்ளைச் சர்க்கரை இல்லாத உணவும் இவர்களுக்குக் கொடுப்பது அவசியம். தினசரி உணவில் வெந்தயம், கறிவேப்பிலை பொடி எடுத்துக்கொள்வது, கூடுதல் கட்டுப்பாட்டைத் தரும்.