குழந்தை பெற்றுகொள்ள முடியாத தம்பதிகளுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருப்பது தான் ஐவிஎஃப் முறை. செயற்கைமுறையில் சோதனைக்குழாயில் கருத்தரிப்பு செய்து அதை கருப்பைக்கு மாற்றி கருப்பையில் குழந்தையை வளரச்செய்வதே இம்முறை.. இம்முறை அதிக வெற்றியை கொடுத்தாலும் சிலருக்கு இம்முறை தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளது.
பலருக்கு ஓரிரு முறை தோல்வி ஏற்பட்ட பின்பே வெற்றி கிடைக்கிறது. ஐவிஎஃப் முறை(இன்பிட்ரோ ஃபெர்டிலைசேஷன்) அதிக செலவும் அலைச்சலும் தேவைப்படும் முறை என்பதால் தோல்வி ஏற்படும் போது தம்பதிகள் மனம் தளர்ந்து விடுவதும், எதனால் இப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமலும் வருந்துகின்றனர். பொதுவாக ஐவிஎஃப் தோல்விக்கு பெண்ணின் வயதும் கருவின் தரமும், கருமாற்றும் போது ஏற்படும் பிரச்சனைகளுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
பெண்ணின் வயது…..
கருத்தரிக்கும் வாய்ப்பு வயது ஏறும் போது குறைகிறது. இளம் வயதில் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். 35 வயதிற்குள் இருக்கும் பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு 32 சதவீதம் என்றால் 40 வயதான பெண்களுக்கு வெறும் 16% வாய்ப்பே உள்ளது.
கருவின் தரம்…..
கருவின் தரமே ஐவிஎஃப் முறையின் வெற்றியை பெரிதும் நிர்ணயிக்கிறது. கருவின் உள்ள மரபணு குறைபாட்டினால் கரு, கருப்பையில் தங்காமல் வெளியேறிவிடுகிறது. பார்க்க நன்றாக இருக்கும் கருவில் கூட 50 சதவீதம் மரபணு குறைபாடு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மரபணு குறைபாடும் மற்ற சில குறைபாடுகளும் சேர்ந்து கரு, கருப்பையில் ஒட்டாமல் வெளியேற காரணமாகிறது.
கருப்பையில் கரு ஊன்றுவதில் ஏற்படும் பிரச்சனைகள்…
கருப்பையில் ஊன்றப்பட்ட கரு வளர்ச்சியடையாமல் நின்று விடுவதை பெரும்பாலான ஐவிஎஃப் தோல்விக்கு காரணம். கரு வளராமல் போவது எதனால் என்று சொல்ல முடியாது. மேலும் கருப்பையில் சதை வளர்ச்சி(பாலிப்), சினைப்பையில் நீர்க்கட்டி போன்றவைகளும் கருப்பையில் கரு தங்காமல் போவதற்கு காரணமாகின்றன.
ஐவிஎஃப் வெற்றியடைவதற்கான வழிமுறைகள் அதிக எண்ணிக்கை…
இரண்டிற்கு மேற்பட்ட கருவை கருப்பைக்கு செலுத்துவதன் மூலம் ஐவிஎஃப் முறையை வெற்றி பெற செய்யலாம். அதிக கரு என்பதால் அதிக சிசு உண்டாகும் என்ற பயம், வயது முதிர்ந்த ஏற்கனவே ஐவிஎஃப் தோல்வியுற்ற பெண்களுக்கு மிகக்குறையே.
கடினமான கருமாற்றத்தை சுலபமாக்குவது…..
கருவை கருப்பைக்கு மாற்றும் போது கருப்பைவாய் சுருங்கி இருப்பதோ, கருப்பை வாய் வளைந்து இருப்பதோ கருமாற்றத்தை கடினமாக்குவதுடன், ரத்தப்போக்கையும் ஏற்படுத்தலாம். இதை தடுக்க ஐவிஎஃப் முறைக்கு முன்பாக ஹிஸ்டரோஸ்கோப்பி மூலம் இதை சோதனை செய்து பார்க்க வேண்டும்.
முதிர்ந்த கருவை மாற்றுதல்…..
ப்ளாஸ்டோ சிஸ்ட் என்ற முதிர்ந்த கருவை(சிலநாட்கள் வளர்ந்த) கருப்பைக்கு மாற்றுவதின் மூலம் சிறந்த கருவாக தேர்ந்தெடுத்து மாற்றலாம்.
கருமுட்டை உடைவதற்கு உதவுதல்….
கரு, கருப்பையில் ஊன்றுவதற்கு முன் அதன் மேற்புற மெல்லிய ஓடு உடைந்து அதனுள்ளிருக்கும் கரு மட்டுமே கருப்பையில் ஊன்றி வளரத்தொடங்கும்.
கருவை சுற்றியிருக்கும் மெல்லிய ஓடான ஜோளா பெலுசிடா உடையாததனாலும் கூட கரு தங்காமல் போகலாம். எனவே கருவை மாற்றுவதற்கு முன் அதன் ஓட்டை உடைத்து (அசிஸ்டட் ஹேட்சிங்) கருப்பையில் பொருத்துவது, ஐவிஎஃப் வெற்றியடைய உதவும்.
சில ஆராய்ச்சிகள் கருப்பையில் உட்புற சுவற்றை ஐவிஎஃப்க்கு முன்பு லேசாக கீறி விடுவதும் வெற்றியளிக்கும் என்று கூறுகின்றன.
மரபணு சோதனை…
கருவை மாற்றுவதற்கு முன்பு ப்ரீஇன்ப்ளான்டேஷன் ஜெனடிக் டெஸ்டிக் (பிஜிடி) மூலம் மரபணு குறைபாடு கருவில் உள்ளதா என்பதை பரிசோதித்து பின்பு கருப்பைக்கு மாற்றுவதும் சிறந்தது. கருவின் மரபணு குறைபாடு இருப்பதே பெரும்பாலான ஐவிஎஃப் தோல்விக்கும், குறை பிரசவத்திற்கும் காரணமாக இருப்பதால் பிஜிடி பரிசோதனை இப்பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது.
முட்டை மற்றும் விந்தணு மற்றும் முட்டையின் தரம் சரியில்லையென்றாலும் ஐவிஎஃப் தோல்வியடையலாம். இதை தவிர்க்க தரமான முட்டை மற்றும் விந்தணு தானம் மூலம் இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.
மேற்கூரிய வழிமுறைகள் மூலம் தம்பதியரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ஐவிஎஃப் முறையின் வெற்றியை அதிகரிக்க முடியும்.