Home சூடான செய்திகள் உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..

27

201501041531463776_Usarayya-usaru_SECVPFஅவள் நிறைய படித்தவள். உயர்ந்த பணியில் இருப்பவள். அழகும், புத்திசாலித்தனமும் கொண்டவள்.

அவளது தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளை தேடியதால் திருமணம் தாமதமானது. ஆனாலும் அவளுக்கு நிகரான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. கல்வி, அந்தஸ்தில் குறைந்த ஒரு வரனை கடைசியாக தேர்ந்தெடுத்தார்கள். ஒரு வழியாக 30–வது வயதில் அவளுக்கு திருமணம் நடந்தது.

புகுந்த வீட்டிற்கு சென்ற அவள், எல்லோரிடமும் இயல்பாக நெருக்கமாகிவிட்டாள். விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளும் சாதுரியமும் அவளிடம் இருந்ததால், கணவரும் அவளது அன்புக்கு அடிமையாகிவிட்டார். கணவர் வீட்டு உறவினர்களும் அவளிடம் அதிக அன்பு பாராட்டினார்கள்.

அழகு, அந்தஸ்து, அதிக பாசம் ஆகிய மூன்று விஷயங் களிலும் அவள் முன்னணியில் இருந்தது, மாமியாரையும், நாத்தனாரையும் புலம்பவைத்தது. ‘நேத்து வந்தவளை இப்படி எல்லோரும் சேர்ந்து தலையில தூக்கிவைத்து கொண்டாடுகிறார்களே! போகிறபோக்கில் நம்மை யாரும் கண்டுகொள்ளவேமாட்டார்களோ!’ என்று கவலைப்படத் தொடங்கினார்கள். அதுவே நாளடைவில் அவர்களுக்குள் பொறாமைத் தீயை உருவாக்கியது.

அவளுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் திடீரென்று ஒரு பெண்மணி, அவளை பார்க்க வந்தாள். அந்த பெண்மணியின் மகனும், அவளும் நண்பர்களாக பழகியவர்கள். அவளை தனது மகனுக்கு மணமுடித்துவிடவேண்டும் என்று அந்த பெண்மணி எத்தனையோ விதமான முயற்சிகளை செய்து பார்த்தார். அவளோ, ‘அவன் எனது நண்பன், அவ்வளவுதான். அவனை திருமணம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என்று நிராகரித்துவிட்டாள். அந்த கோபம் அந்த பெண்மணி மனதில் இருந்துகொண்டிருந்தது.

தேடி வந்த அந்த பெண்மணி வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவில்லை. அவளது மாமியாரிடம், ‘இவள் என் வீட்டுக்கு மருமகளாக வேண்டியவள். அந்த அளவுக்கு என் மகனிடம் பழகினாள். ஆனால் அது வெறும் நட்புதான் என்று கூறியதால் உங்கள் வீட்டு மருமகள் ஆகிவிட்டாள். இப்போதும் என் மகனும்– இவளும் நட்பாகத்தான் பழகிக்கொண்டிருக்கிறார்கள். இவளுக்கு இங்கு ஏதாவது தொந்தரவு ஏற்பட்டால் எங்களால் தாங்கிக்கொள்ள முடியாது’ என்று கூறியவள், சிறிது நேரம் வேறு பல விஷயங்களையும் சிரித்து பேசிவிட்டு போய்விட்டாள்.

‘ஏதாவது துரும்பு கிடைக்காதா, அதை தூணாக்கி புதுப்பெண்ணுக்கு பிரச்சினை கொடுக்கலாமே!’ என்று யோசித்துக்கொண்டிருந்த மாமியாரும், நாத்தனாரும் அதை ‘லபக்’கென பிடித்துக்கொண்டார்கள். அதைவைத்து மகனுக்கும்– மருமகளுக்கும் இடையே பிரச்சினையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

‘அந்த ஆள் உன்னைவிட வாட்டம் சாட்டமா அழகாக இருக்கிறான். இப்பவும் அவன் சில நாட்கள் உன் பொண்டாட்டியை காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டுட்டு போகிறான். இவள் ஆபீஸ்க்கு போறேன்னு சொல்லிக்கிட்டு கண்ட நேரத்திலும் வர்றாள். இரண்டு பேரும் எங்கெங்கு சுற்று கிறார்களோ! என்னென்ன நடக்குதோ யாருக்கு தெரியும்!’ என்பதுபோல், அவளது கணவரிடம் பேசி மனதை கரைத்துக்கொண்டிருக்கிறார்கள், மாமியாரும், நாத்தனாரும்!

நீங்களும் இப்படி புதிதாக கல்யாணமான எந்த பெண்ணின் வீட்டிற்கும் சென்று தேவையில்லாமல் எதையும் கொளுத்திப்போட்டுட்டு வந்திடாதீங்கன்னு சொல்ல வர்றோம் அவ்வளவுதானுங்க..!