Home சூடான செய்திகள் உஷாரய்யா உஷாரு…

உஷாரய்யா உஷாரு…

29

201603061301077206_Usarayya-usaru-_SECVPF‘அழகாக, ஜோடிப் பொருத்தமாக, நிறைய சம்பாதிப்பவராக தனது கணவர் இருக்கவேண்டும்’ என்று அவள் ஆசைப்பட்டாள். அவள் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் விரும்பியது போன்ற இளைஞரை பெற்றோர் தேடிப்பிடித்து திருமணம் செய்துவைத்தார்கள். கணவருக்கும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை.

மகிழ்ச்சியாகத்தான் மணவாழ்க்கையை தொடங்கினார்கள். அலுவலக வேலைகள் சோர்வடையும் அளவுக்கு இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தையும் திறம்பட நடத்தி கணவரிடம் பெயர் வாங்கவேண்டும் என்று அவள் விரும்பினாள். வீட்டை அலங்காரம் செய்வது, ருசியாக உணவு தயாரிப்பது, கணவரின் குடும்பத்தினரையும் நன்றாக கவனித்துக்கொள்வது போன்று எல்லாவற்றிலும் தனிக்கவனம் செலுத்தி, கணவரை அன்பால் கவர நினைத்தாள்.

இருவருக்கும் இரவு, பகல் என்று வேலை நேரம் மாறிமாறி வந்தது. இருவரும் சந்தித்துக்கொள்ளும் நேரமும் குறைந்தது. கொஞ்ச நேரமே கிடைத்தாலும் அதையும் கணவரோடு மகிழ்ச்சியாக செலவிட அவள் திட்டமிட்டாள். ஆனால் அவள் எதிர்பார்ப்பிற்கெல்லாம் நேர்மாறாக இருந்தது, கணவரின் நடவடிக்கை.

அவர் தாமதமாகவே வீடு திரும்புவார். அவள், எவ்வளவு நேரமானாலும் கணவருக்காக காத்திருப்பாள். ஆனால் அன்பாக அவளோடு பேசவோ, அவளோடு நேரத்தை செலவிடவோ செய்யாமல், தனது அறைக்குள் சென்று ‘லேப்டாப்’பை ‘ஆன்’ செய்துவிடுவார். பின்பு அதிலே மூழ்கிவிடுவார். அவள் காத்திருந்தும் அவர் கவனத்தில் எடுத்துக்கொள்ளாததால் தூங்கப்போய்விடுவாள். திருமணமான நான்கு மாதங்களிலே இந்த வழக்கம் நிரந்தரமானது.

தனது எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் கணவரிடம் கோடிட்டு காட்டிப்பார்த்தாள். எந்த பலனும் இல்லை. அடுத்துதான் இப்படி ஒரு அதிரடியான முடிவை எடுத்தாள்.

கணவருக்கு ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு, வீட்டில் இருந்து வெளியேறினாள். பெண்களுக்கான ஆஸ்டல் ஒன்றில் தங்கியிருந்து வேலைக்கு போகிறாள்.

அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த முக்கியமான சில வரிகள்:

‘சராசரி மனைவி சாதாரணமாக எதிர்பார்க்கும் ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றிவைக்கக்கூட நீங்கள் நேரம் ஒதுக்குவதில்லை. ‘மனைவி வேண்டாம். லேப்டாப் போதும்’ என்று நீங்கள் முடிவு செய்திருக்கிறீர்கள். நான் அன்பிற்கும், அனுசரணைக்கும் ஏங்கிக்கிடக்கும் இந்த நேரத்தில் எந்த ஆணாவது ஆறுதல் சொன்னாலோ, அன்பு காட்டினாலோ அவன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும். அடுத்து இல்லாத பொல்லாப்பு எல்லாம் வரும். கடைசியில் அவமானத்திலோ, கொலையிலோகூட அது முடியலாம். அந்த மாதிரியான சிக்கலில் நான் மாட்டிக்கொள்ள நீங்களே காரணமாகிவிடுவீர்கள் என தெரிகிறது.

அதனால் உங்களை நீங்களே ஆத்மசோதனை செய்வதற்காக 3 மாதங்கள் வாய்ப்பு தருகிறேன். அதுவரை நான் இந்த ஆஸ்டலிலே இருந்து வேலைக்கு செல்கிறேன். அதன் பிறகு நீங்கள் எடுக்கும் முடிவை பொறுத்து நாம் சேர்ந்து உண்மையான வாழ்க்கை வாழலாம் அல்லது முறைப்படி பிரிந்துவிடலாம்..’ இப்படியே நீளுகிறது அந்த கடிதம்!

நீங்களும் மனைவியை கண்டுக்காமல் லேப்டாப், செல்போனில் சிக்கிக்கிடக் கிறீர்களா? உங்களுக்கான விஷயம்தான் இது..!