டீன்ஏஜ் பெண்கள் பல நேரங்களில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமுக ரீதியாகவும் குழப்பங்களுக்கு ஆளாகிறார்கள்.இந்த மாதிரியான நேரங்களில் இவர்களுக்கும் நல்ல ஆலோசகர்கள் இல்லாத நிலையில் தான் தீய நபர்களின் சகவாசத்தால் போதை, பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது. இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது.
பெரும்பாலும் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலை முடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகபருக்கள் அதிகமாக உள்ளன’போன்ற பிரச்னைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களை பற்றிய தாழ்ந்த சுய மதிபீட்டிற்கு ஆளாகிறார்கள்.
விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத்தொடங்கினாலே, அவர்கள் மிக பெரிய பிரச்னையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். இந்த பருவத்தில் தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல் நல பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழி முறைகளையும் சுயமாக வளர்த்துக் கொண்டாலே போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத் தப்பிவிடலாம்.
பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும் குறிபாக டீன் ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் ஸ்லிம்மாக இருந்தால் தான் அழகு என நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் ரத்த சோகை போன்ற நோய்க்கு ஆளாகின்றனர். எனவே சத்தான காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கபடுத்த வேண்டும்.
உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை சிலருக்கு வரும். இது இவர்களே தானாக வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு ஹார்மோன் கோளாறு, உணவு பற்றாக்குறை இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு வளர்ச்சி தள்ளி போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்ற பின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி உயரத்தை அடைவர்.
பருவ வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேசவேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர் அது தொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமுக, கலாச்சார மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர் தயங்குகிறார்கள். அப்படித் தயங்கிக் கொண்டிருக்காமல் பிள்ளைகளிடம் சகஜமாக பேசி, அவர்களின் உடல் ரீதியான, மன ரீதியான குறைகளை கேட்டறிந்து, தேவையான உணவுகளை வழங்க வேண்டும்.