Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சிக்கும் யோகாசனங்களுக்கும் உள்ள 9 வேறுபாடுகள்

உடற்பயிற்சிக்கும் யோகாசனங்களுக்கும் உள்ள 9 வேறுபாடுகள்

29

யோகா உலகளவில் பிரபலமாகியுள்ளது. பல்வேறு நன்மைகளை அளிப்பதன் காரணமாக உலகளவில் பலர் யோகப் பயிற்சிகளைச் செய்கின்றனர். வணிகரீதியாக, யோகா ஓர் உடற்பயிற்சி முறையாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால், அது உண்மையல்ல! யோகா என்று நாம் பெரும்பாலும் குறிப்பிடுவது யோகாசனங்களைத் தான். யோகாசனங்கள் என்பவை யோகக் கலையின் எட்டு நிலைகளில் ஒரு நிலை மட்டுமே, அதுவே உடலுக்கான பயிற்சியாகக் கருதப்படுகிறது.

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால், உடற்பயிற்சிகள் (ரன்னிங், ஜிம் பயிற்சிகள் போன்றவை) உடல் சார்ந்து மட்டுமே விளைவுகளை ஏற்படுத்துபவை. யோகாசனங்கள் உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் பல நன்மைகளை அளிப்பவை.

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிகளுக்கும் உள்ள இடையே வேறுபாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

1. இடமும் உபகரணங்களும்

உடற்பயிற்சிகள் செய்ய, போதிய இடமும் உபகரணங்களும் தேவைப்படும்.
யோகாசனப் பயிற்சிகளைச் செய்ய சிறிய இடமும் ஒரு யோகா மேட்டும் (பாய்) போதும்.

2. சுவாசம்:

உடற்பயிற்சிகளைச் செய்தபிறகு சுவாசத்தின் போக்கு சீரற்றுக் காணப்படும்.
யோகாசனப் பயிற்சிகள் செய்த பிறகு சுவாசம் சீராகவும், மெதுவாகவும் லேசாகவும் மாறும்.

3. வேகம்:

உடற்பயிற்சிகள் செய்யும்போது வேகமாகச் செய்ய வேண்டியிருக்கும். இதனால் தசைகள் தேய்மானமடையும், தசைகளில் நுண்ணிய கிழிசல் ஏற்படும்.
யோகாசனங்கள் மெதுவாகச் செய்யப்படுகின்றன. தசைகள் கிழிபட வாய்ப்பு மிகக் குறைவு.

4. வளர்சிதை மாற்றம்:

உடற்பயிற்சிகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், இதனால் பெரும்பாலானவர்கள் உடற்பயிற்சிக்குப் பிறகு அதிகமாக சாப்பிடத் தொடங்கிவிடுவதுண்டு.
யோகாசனப் பயிற்சிகள் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கிறது, குறைவாகவே சாப்பிட்டாலும் நிறைவாக உணர்வீர்கள்.

5. ஆற்றல்:

உடற்பயிற்சி செய்தால் தெம்பிழந்து களைப்பாகத் தோன்றும்.
யோகாசனங்கள் செய்வதால் ஆற்றல் காக்கப்பட்டு, புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

6. விழிப்புணர்வு:

உடற்பயிற்சியைப் பொறுத்தவரை விழிப்புணர்வு என்பதற்கு முக்கியத்துவமில்லை. உடற்பயிற்சி செய்துகொண்டே ஒருவரின் மனம் எங்கோ அலைந்து திரிந்துகொண்டிருக்கலாம்.
யோகாசனம் என்பது விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது. உடலின் அசைவுகள், சுவாசம் மற்றும் எண்ணங்களை விழிப்புணர்வுடன் கவனித்துக்கொண்டே செய்ய வேண்டியவை யோகாசனப் பயிற்சிகள்.

7. கோட்பாடுகள்:

உடற்பயிற்சிகள் எவ்விதக் கோட்பாடுகளையும் போதிப்பதில்லை.
யோகத்தைப் பொறுத்தவரை, ஐந்து கோட்பாடுகள் உள்ளன. அவை, சரியான உணவு, சரியான சுவாசம், தொடர்ச்சியான பயிற்சி மற்றும் ஆசுவாசப்படுத்தல்.

8. தாக்கங்கள்:

உடற்பயிற்சிகள் உடலின் தன்மைகளை மட்டுமே பண்படுத்துகின்றன.
யோகப் பயிற்சிகள் சகிப்புத் தன்மை, சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, நிலையான தன்மை போன்ற பல்வேறு தன்மைகளை மேம்படுத்துகின்றன.

9. தடைகள்:

உடல்நிலை சரியில்லாத சமயங்களில் உடற்பயிற்சிகளைச் செய்வது கடினம். மேலும் வயதானவர்களும் உடற்பயிற்சிகள் செய்வது கடினம்.
யோகாசனங்களை எந்த வயதினரும் செய்ய முடியும். ஆசுவாசப் பயிற்சிகள் சிலவற்றை உடல்நலம் சரியில்லாதபோதும் செய்ய முடியும்.