காதல் என்பது ரஜினியின் வசனம் போல, “அது எப்ப வரும் எப்படி வரும்’ன்னு தெரியாது… ஆனா, வர வேண்டிய நேரத்தில கரெக்ட்டா வரும்…” இது 20 ஆம் நூற்றாண்டின் காதலர்களுக்கு. இன்றைய 21ஆம் நூற்றாண்டின் காதலர்களுக்கு சிறிய மாற்றம் செய்ய வேண்டும், “காதல் எப்ப வரும் எப்படி வரும்’ன்னு தெரியும்… ஆனா, போக வேண்டிய நேரத்தில கரெக்ட்டா போயிடும்…
இன்றைய கல்லூரி காதலர்கள் செய்வதை காதல் என்று சொல்வதா, அல்ல காதல் போன்ற ஒருவித ஆசை என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஏனெனில், காதலிக்கும் இருவரில் ஒருவர் அம்பியாகவும், மற்றொருவர் ரெமோவாகவும் தான் இருக்கிறார்கள். சில ஜோடிகளில் இருவருமே ரெமோ வகையை சார்ந்தவர்கள் தான், இவர்கள் செமஸ்டருக்கு ஒரு ஜோடியை மாற்றுகிறார்கள்.
எது, என்னவாக இருந்தாலும் சரி, நாம் கூற வந்ததை கூறிவிட வேண்டும் அல்லவா… அதாவது நீங்கள் பொத்தி, பொத்தி வளர்த்து வரும் காதல் கழன்று ஓட போகிறது என்பதை ஒருசில அறிகுறிகளை வைத்து கண்டறிந்துவிடலாம். அவற்றைப் பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்….
உற்சாகம் குறைந்து காணப்படும்
காதல் என்ற ஓர் உறவில் மட்டும் தான் “தினம், தினம், தினம் தீபாவளி…” என்பதை போல, உற்சாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காதலன் அல்லது காதலியின் அழைப்பு அந்த இரவு நேரத்தில் வரும் போது, அவர்கள் முகத்தில் பூக்கும் அந்த புன்னகை மத்தாப்பு, அணையாமல் எரியும். இதில், குறைபாடு தென்பட்டாலே, உங்கள் காதலில் ஏதோ எதிர்மறை மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.
நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்
நீங்கள் எப்போது தொடர்பு கொள்ள நினைத்தாலும், ஏதேனும் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க முயற்சிப்பது, அழைக்கிறேன் என்று கூறி, நேரம் கழித்து கூப்பிடுவது போன்றவை உச்சக்கட்ட அறிகுறி. இதை வைத்தும் நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் அம்பியின் அண்ணனாக தான் இருக்க வேண்டும்.
வெறுப்பாக இருக்கும்
நண்பன் ஒருமுறை கூறிய விஷயத்தை மறுமுறை கூறினாலே, புருவங்கள் உயர்த்தும் நீங்கள், காதலி 1000 முறை கூறினாலும், மணக்க மணக்க ரசித்து கேட்டுக்கொண்டிருப்பீர்கள். இது மாறி, அவர் என்ன பேசினாலும், அமிலத்தை அள்ளி காதில் ஊற்றியது போல தோன்ற ஆரம்பித்தல்.. உங்கள் லவ்தீக வாழ்க்கை முற்று பெற போகிறது என்று அர்த்தம்.
கோபம் கடுகு போல வெடிக்கும்
தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம், நீங்கள் கடுகு போல வெடிக்க ஆரம்பித்தல், ஓரிரு வார்த்தைகள் அதிகம் பேசினால் கூட, “சும்மா நச்சரிக்காத..” என கூறுவது போன்றவை முக்கியமான அறிகுறிகள் ஆகும்.
சலித்து காணப்படுவது
காதலர்கள் இருவர் ஒன்றாக இருந்தால், அவர்களை சுற்றியிருக்கும் எதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்று கூறுவது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்திற்கு மாறாக, உங்கள் காதலன்/காதலி அருகாமையில் இருக்கும் நேரத்திலும் கூட, சுற்றி இருப்பதை நோட்டம் விடுவது. சலித்து போய் அமர்ந்திருப்பது போன்றவை கடைநிலை அறிகுறிகள்.
ஈர்ப்பு குறைவது
ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பு குறைவது. பார்க்க வேண்டும், பேச வேண்டும். ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் (முத்தம், கட்டிப்பிடித்தல் உட்பட) குறைய ஆரம்பிப்பது எல்லாம், உங்கள் காதல் வாழ்க்கை முடிவு பெற போகிறது என்பதற்கான அறிகுறிகள் தான்.
வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது
உங்கள் காதலன் அல்லது காதலியை தாண்டி வேறொருவர் மீது உங்களது ஈர்ப்பு, திசை மாறி செல்கிறது என்றாலே, நீங்கள் உங்கள் உறவில் தோல்வியுற்றுவிட்டீர்கள் என்று தான் அர்த்தம். இதற்கு மேலும் போலியாக நடித்துக் கொண்டிருப்பதற்கு பதிலாக, பிரிந்துவிடுவதே மேல்.
மதிப்பு குறைவது
உங்கள் சொல்லுக்கு மதிப்பு இருக்காது, நீ என்ன சொல்வது, நான் என்ன செய்வது என்ற வகையில் உங்கள் உறவு பயணிக்க ஆரம்பிக்கும்.
நேரம் ஒதுக்க தவிர்ப்பது
இருவரும் ஒன்றாக வெளியிடங்களுக்கு செல்ல, பேச, ஒன்றாக இருக்க நேரம் ஒதுக்குவதை வீண் வேலை என்று எண்ண தொடங்குவது.
அவர்கள் நல்லவர்கள் என்ற எண்ணத்தில் குறைபாடு ஏற்படுவது
அவர்கள் மீது உண்மையாக எந்த தவறும் இல்லாத போதிலும் கூட, அவர்களது குணாதிசயங்கள் மீது போதிய ஈடுபாடு இன்றி காணப்படுவது.