நமது உயரம் அதிகரிக்கவோ, குறைவாக இருக்கவோ நாம் பிறந்த மாதம் காரணமாக இருக்கலாம் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் ஆரம்பகட்ட முடிவில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஜான் பெர்ரி என்கிற மருத்துவரின் தலைமையில் நடத்திய ஆராய்ச்சியில் இவ்வாறு தெரியவந்துள்ளது.
குழந்தை கருத்தரிப்பது என்பது எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நிகழலாம். இதற்கு பெற்றோரின் சமூகச் சூழலோ, வயதோ, உடல் நிலையோ காரணமாக அமைவதில்லை. மாறாக குழந்தையை அடையாளப்படுத்துவதற்கு, அது பிறந்த பின் வாழும் சூழல் மட்டுமன்றி பிறக்கும் மாதமும் முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோடைக்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடனே பிறந்து, அதிகம் விளையாடுவது, நன்றாக உணவு உண்பது என ஆரோக்கியமாக இருக்கும். ஆகவே, பருவ காலத்தில் சீரான உயரமாக வளரும் என தெரியவந்துள்ளது.
அதிலும், அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது கோடைச் சூரியனின் மூலம் இக்குழந்தைகள் விட்டமின் டி சத்தைப் பெறுகிறது. மேற்கொண்டு இந்த ஆராய்ச்சியை நடத்தும்போது இன்னும் பல புதிய தகவல்கள் தெரியவரலாம் எனத் தலைமை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாறாக குளிர்காலத்தில் பிறக்கும் குழந்தைகள், எடை குறைவாகவும் பின்னாளில் உயரம் குறைவாகவும் இருக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளும், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், ஆரோக்கியமாகவே இருப்பதால், பூப்படைவதும் முறையாக இருக்கும் எனவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.