Home சூடான செய்திகள் இல்லற வாழ்க்கை சுமுகமாக தொடர்வதற்கு மனைவியை ரசியுங்கள்..

இல்லற வாழ்க்கை சுமுகமாக தொடர்வதற்கு மனைவியை ரசியுங்கள்..

31

இல்லற வாழ்க்கை இனிமையாகவும், சுமுகமாகவும் தொடர்வதற்கு கணவன் ஒருசில விஷயங்களில் மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் மந்திர யுக்தியை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இருவரில் கோபத்தை தூண்டும் வகையில் யார் பேசினாலும் மற்றொருவர் பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

ஆத்திரத்தில் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலுக்கு, பதில் பேச நினைப்பது பிரச்சினையின் வீரியத்தை அதிகப்படுத்திவிடும். பொதுவாக ஆண்கள் கோபத்தில் ஆக்ரோஷமாக வார்த்தைகளை கொட்டி விடுவார்கள். ஒருசில மணி நேரங்களில் தாங்கள் என்ன பேசினோம் என்பதை மறந்து, சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி அல்ல. சண்டை எழுந்தபோது கணவர் பேசியதை நினைத்து பார்த்து வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

மனைவியை சமாதானப்படுத்தும் வகையில் கணவரின் செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். கண் கலங்கினாலோ, அழுது கொண்டிருந்தாலோ பாராமுகமாக இருந்துவிடக் கூடாது. யார் பக்கம் தவறு இருந்தாலும் அதனை பெரிதுபடுத்தாமல் சண்டையால் எழுந்த மனஸ்தாபத்தை சிலமணி நேரங்களுக்குள்ளாகவே முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும். அதற்காக மன்னிப்பு கேட்கவும் தயங்கக்கூடாது. அது ஈகோ பிரச்சினை தலைதூக்க இடம் கொடுக்காமலும் பார்த்துக்கொள்ளும்.

மனைவியின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ள கணவர் பழகிக்கொள்ள வேண்டும். வருத்தமாகவோ, சோகமாகவோ இருக்கும்போது மனைவியின் கரங்களை பற்றிக்கொண்டு ஆறுதலாக நான்கு வார்த்தை பேச வேண்டும். அது கணவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். காலை வேளையில் வீட்டு வேலைகளை விரைந்து முடிப்பதற்கு மனைவி எதிர்கொள்ளும் சிரமத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். அது சிறிய வேலையாகவே இருந்தாலும் இருவருக்குமிடையே நேசத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும்.

குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு போதுமான நேரம் கிடைக்காமல் போய்விடும். சரியாக ஓய்வெடுக்கவோ, தூங்கவோ முடியாமலும் சுழன்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்காக தனியே நேரத்தை ஒதுக்கி கொடுங்கள்.

குழந்தைகள் என்றாலே சுட்டித்தனங்களுக்கும், சேட்டைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவர்களை கவனித்துக்கொண்டு மற்ற வேலைகளை செய்வதற்கு சிரமப்படுவார்கள். அந்த சமயங்களில் ஆண்கள், குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட வேண்டும். விடுமுறை தினங்களில் குழந்தைகளை வெளியே அழைத்து சென்று வரலாம். அது குழந்தைகளையும் குஷிப்படுத்தும். மனைவியும் வார இறுதி நாட்களில் செய்வதற்காக ஒதுக்கி வைத் திருந்த வேலைகளை சிரமமின்றி செய்வதற்கு ஏதுவாகும்.

மனைவி நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருந்தால் அவர் பேசும் விஷயங்களை காது கொடுத்து கேட்டு ரசியுங்கள். வெளி இடங்களுக்கு அழைத்து செல்லும்போது மற்ற தம்பதியர்களுக்கு மத்தியில் கணவர் எந்த அளவுக்கு மரியாதை கொடுத்து நடந்து கொள்கிறார் என்ற எதிர்பார்ப்பு மனைவியிடம் இருக்கும். அதற்கேற்ப தக்க மரியாதை கொடுங்கள்.