Home பெண்கள் அழகு குறிப்பு இந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

இந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்!!!

13

09-1428574834-7-exerciseஇந்திய ஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அதிகம் மெனக்கெடமாட்டார்கள். இயற்கை அழகே போதும் என்று சொல்பவர்கள். என்ன தான் வெளியே அப்படி சொல்லிக் கொண்டாலும், மனதில் நம் அழகை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணமும் கட்டாயம் இருக்கும். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.

ஆனால் ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட ஃபேர்னஸ் க்ரீம்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, அன்றாட பழக்கவழக்கங்களில் சரும அழகை அதிகரிப்தற்காக ஒருசில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதும். இதனால் நிச்சயம் சருமம் ஆரோக்கியத்துடனும், பொலிவுடனும், பெண்களைக் கவரும் வண்ணம் மாறும்.

சரி, இப்போது இந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டியவைகள் குறித்துக் காண்போம். அதைப் படித்து பின்பற்றி, பலனைப் பெறுங்கள்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும்

இதை கூற்றை பல மில்லியன் முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதுவே உண்மை. தினமும் உடலுக்கு போதிய அளவு நீர்ச்சத்து கிடைத்தால் தான் சரும செல்கள் புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். அதற்கு குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். இதனால் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

கற்றாழை:

மக்களுள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சரும வகை இருக்கும். எனவே சரும வகைக்கு ஏற்றவாறான பொருட்களைத் தான் எப்போதும் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் மட்டுமே பலனைப் பெற முடியும். இல்லாவிட்டால், சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஆனால் கற்றாழை ஜெல் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஓர் அழகு பராமரிப்பு பொருள். எனவே அவற்றை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ, முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பளிச்சென்று இருக்கும்.

சன் ஸ்க்ரீன் அவசியம் :

இந்தியாவில் சூரியக்கதிர்களின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும். எனவே வெளியே வெயிலில் செல்லும் போது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம், சன் ஸ்க்ரீன் லோசனை வாங்கித் தடவ வேண்டும். இதனால் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு, சருமத்தின் அழகும், ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஆகவே ஆண்களே தவறாமல் சன் ஸ்க்ரீன் லோசனைத் தடவுங்கள்.

மாய்ஸ்சுரைசர்:

சன் ஸ்க்ரீனைப் போலவே மாய்ஸ்சுரைசரும் அவசியமான ஓர் அழகு பராமரிப்புப் பொருள். சருமம் எப்போதும் வறட்சியுடன் இருந்தால், அதனாலேயே அழகு பாழாகும். எனவே பகலில் லைட் மாய்ஸ்சுரைசரையும், இரவில் அடர்த்தியான மாய்ஸ்சுரைசரையும் தடவுங்கள். இதனால் சருமம் வறட்சியடைவதைத் தடுக்கலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடவும்:

அழகை அதிகரிக்க வெறும் க்ரீம்களைத் தடவினால் மட்டும் போதாது, காய்கறிகள் மற்றும் பழங்களையும் அதிக அளவில் உட்கொண்டு வர வேண்டும். இதனால் சருமத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, சருமத்தின் அழகும் அதிகமாகும்.

உப்பை அதிகம் சாப்பிடுபவரா?

உப்பை உணவில் அதிகம் சேர்த்து உட்கொண்டு வந்தால், அது முகத்தை பலூன் போன்று வீங்கச் செய்து, அழகைக் கெடுக்கும். எனவே உப்பைத் தவிர்க்க வேண்டும் அல்லது உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

போதிய தூக்கம்:

உங்களுக்கு போதிய அளவு தூக்கம் கிடைக்காவிட்டால், கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து, முகப் பொலிவு போய்விடும். எனவே அழகு அதிகமாக குறைந்தது 7 மணிநேரத் தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். இதனால் உடலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புத்துயிர் பெற்று, நம்மை அழகாக வெளிக்காட்டும்.

சோம்பேறித்தனமாக இருப்பது

சோம்பேறித்தனமாக எந்நேரமும் தூங்கிக் கொண்டு, உடல் உழைப்பின்றி இருந்தால், உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது தடுக்கப்படும். வியர்வை வெளியேறினால் தான் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வியர்வையின் வழியே வெளியேறி, சருமத்தின் அழகை அதிகரிக்கும். எனவே தினமும் குறைந்தது சிறிது நேரமாவது உடற்பயிற்சியை செய்து வாருங்கள்.