Home ஆரோக்கியம் நீரிழிவு இந்தியாவில் 4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!

இந்தியாவில் 4ல் ஒருவருக்கு பிபி, 10ல் ஒருவருக்கு நீரிழிவு!

16

இளம் தலைமுறை இந்தியா நோயாளி இந்தியாவாக மாறிவருகிறதோ என்ற அச்சம் உருவாகும் அமைந்துள்ளது சமீபத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று. அதாவது இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது. அதேபோல் பத்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் ஏற்றுக்கொள்ளும் உணவை உண்ணவேண்டும் என்பது இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் அறிவுரை. நாமே வளர்ந்த நாடுகளின் கழிவுகளை உணவாக உட்கொள்கிறோம். அவர்கள் ஒதுக்கிய குப்பையில் தூக்கிப்போடும் மருந்துகளை நாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இதன் காரணமாகவே நம் இந்தியாவில் உள்ள மக்கள் இன்றைக்கு பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் மெல்லக்கொல்லும் ஒரு நோய். இது இதயம் தொடர்பான நோய்களையும், பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை தொடங்கி பாதம் வரை நோய் தாக்குகிறது. முறையற்ற உணவுப்பழக்கத்தினாலேயே இந்த நோய்களில் சிக்கித் தவிக்கின்றனர் இன்றைய இளைய சமுதாயத்தினர். இது தவிர இந்தியாவில் 26 சதவிகித மக்கள் புகையிலை உபயோகிக்கின்றனர் என்றனர் என்றும் இது தொடர்பான நோய்களில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. 2012 ம் ஆண்டிற்கான புள்ளிவிபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மூன்றில் ஒருவருக்கு உயர்ரத்த அழுத்தம் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 51 சதவிகித மரணங்கள் பக்கவாதம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

வளரும் நாடுகளில் உடல்பருமன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். இதுவே உயர்ரத்த அழுத்த நோய்க்கு அடிகோலுகிறது. இந்தியாவில் 23.1 சதவிகிதம் ஆண்களும், 22.6 சதவிகித பெண்களும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் 11.1 சதவிகித ஆண்களும், 10.8 சதவிகித பெண்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த 20 ஆண்டுகளில் பிரசவகால மரணங்கள் இந்தியாவில் குறைந்துள்ளது என்பது ஆறுதல் தரக்கூடிய செய்தியாகும். 1990 களில் 5.4 லட்சமாக இருந்த பேறுகால மரணம் தற்போது 2.9 லட்சமாக குறைந்துள்ளது.

இதேபோல் சைட் எனப்படும் ஸ்கிரீன் இன்டியா டுவின் எபிடெமிக் அமைப்பு இந்தியர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த மிகப்பெரிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது, அதில் பல்வேறு முடிவுகள் தெரியவந்துள்ளது.

எட்டு மாநிலங்களில் நகர்புறங்களில் வசிக்கும் 16 ஆயிரம் மக்களிடம் மூன்று ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டது. அவர்களில் 60 சதவிகிதத்தினர் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்தஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டதாக சைட் அமைப்பின் தலைவர் டாக்டர் சசாங்ஜோசி தெரிவித்துள்ளார். நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் பலரும் ரெகுலராக ரத்த சர்க்கரை, மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் பலரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 7 சதவிகிதம்தான் இருந்துள்ளது. கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.லி கிராம் அளவிற்கு இருந்து. ஏராளமானோர் ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த 8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது நோய் பற்றிய விழிப்புணர்வு மகாராஷ்டிராவில் குறைவாகவே உள்ளது தெரியவந்தது. இந்தியா முழுவதும் 7 சதவிகிதத்தினர் தங்களுடைய நோய் பற்றிய விழிப்புணர்வு அன்றி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 5 சதவிகிதத்தினர் நோய்பற்றி அறியாமையிலேயே இருக்கின்றனர்.

மாறிவரும் உணவுப்பழக்கமே இதுபோன்ற நோய் பாதிப்பிற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே வருங்கால சமுதாயத்தினரையாவது நோயற்ற சமுதாயமாக உருவாக்க நோய் பற்றிய விழிப்புணர்வும், அதனை கட்டுப்படுத்துவது குறித்த தெளிவும் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.