சுதாவுக்கு 38 வயது. திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இரண்டு குழந்தைகளின் தாய். பிள்ளைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்பி விட்டு, வீட்டு நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்த அவள், எப்படியோ ‘சைபர் பார்ட்னர்’ எனப்படும், ‘இணைய காதலன்’ ஒருவனிடம் சிக்கிக்கொண்டாள்.
“நான் மிகுந்த குற்ற உணர்வுடன் இருக்கிறேன். என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் செய்வதுபோல் தோன்றுகிறது. இப்படியே போனால் அவன் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு சென்று விடுவேன். இப்போது சிலநாட்களாக அவன் என்னிடம் முரண்பாடான சில ஆசைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான். என் கணவருக்கு சந்தேகம் வந்து விட்டால், என்னை விவாகரத்து செய்துவிடுவார்’’ என்றாள்.
அவளிடம் ஏற்பட்டிருந்த மனமாற்றங்களை எல்லாம் அறிந்தபோது கிட்டத்தட்ட அவள், ‘இன்டர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்’ என்ற பாதிப்புக்கு உள்ளாகி விட்டதை உணரமுடிந்தது.
அந்த நபரோடு அவள் செல்போன் வழி இணைய தொடர்பில் பழகி வந்திருக்கிறாள்.
‘கணவர், உன் போனை எடுத்து பார்த்து விடக்கூடாதே! என்ற பயம் எப்போதும் உன்னை வாட்டுகிறதா?’ என்று கேட்டேன்.
“ஆமாம்’’ என்றாள்.
‘நீ அந்த நபரோடு சாட்டிங் செய்யும்போது குழந்தைகள் அருகில் வந்தால், குழந்தைகள் மீது கட்டுக்கடங்காத கோபம் வருகிறதா?’ என்ற கேள்விக்கும், ‘கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன்னால் ‘சாட் கிளீயர் ஆப்ஷன்’ கொடுத்து அனைத்தையும் அழித்து சுத்தம் செய்து விடுகிறாயா?’ என்ற கேள்விக்கும் அவளிடம் இருந்து “ஆமாம்’’ என்ற பதிலே வந்தது.
நான் சற்றுயோசித்ததும், “என் குடும்ப வாழ்க்கை சிதறுண்டு போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுவிட்டது’’ என்று கண்கலங்கினாள்.
இன்று நிறைய பெண்கள் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். வேலை தரும் சோர்வு, கணவருடன் ஏற்படும் சின்னச் சின்ன மனக்கசப்புகள், கணவன்–மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்தல் போன்றவைகளால் கணவன்–மனைவி இடையே மனம் விட்டுப்பேசுவது குறைந்து, பெயரளவுக்கு மட்டும் பேசுகிறார்கள். அப்போது கணவரோடு மனைவி பேச வேண்டிய விஷயங்கள் எல்லாம் ‘பேசப்படாத விஷயங்களாக’ மனைவிகளின் மனதுக்குள்ளே குவிந்து கிடக்கும். யாரிடம் அதை கொட்டுவது என்ற கேள்வி ஏற்படும் போது ‘அவைகளைஎல்லாம் கேட்க இதோ நான் இருக்கிறேன்’ என்று, ஒரு ‘சைபர் பார்ட்னர்’ கிடைத்து விட்டால், தயக்கத்தோடு பேசத் தொடங்கி–குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக்கூட பகிர்ந்து கொள்ளும் நிலைக்கு சென்று விடுகிறார்கள்.
அடுத்தகட்டமாக தன்னை மறந்து, மணிக் கணக்கில் சாட்டிங்கில் ஈடுபடுவார்கள். அப்போது கிட்டத்தட்ட கணவருடனான தகவல் தொடர்பு நின்றுபோகும் அல்லது கணவர் பேசும்போது, ‘ஏன் இவர் பேசிப் பேசி தொந்தரவு தருகிறார்?’ என்ற எரிச்சல் தோன்றும். சாட்டிங் செய்வதற்காக தனிமையில் போய் உட்கார்ந்துவிடுதல், அந்த பார்ட்னரின் விருப்பத்திற்கெல்லாம் வளைய ஆரம்பித்தல் போன்ற நிலைக்குசெல்லும்போது, குடும்ப வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுவிடும்.
அழுது, விம்மி, வெளிப்படுத்த முடியாத கவலைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டஅவள், “நான் எப்படியாவது இந்த சிக்கலில் இருந்து மீள வேண்டும்! அதற்கு வழி சொல்லுங்கள்’’ என்றாள்.
‘சைபர் பார்ட்னரிடம் இருந்து விலகி விடவேண்டும் என்ற எண்ணம் உன்னிடம் வந்து விட்டதால், உன் குடும்ப வாழ்க்கையை காப்பாற்றிவிட முடியும் என்று நீ நம்பலாம். முதலில் அந்த நபரிடம் இருந்து விலகிவிடு. செல்போன் பயன்படுத்தும் நேரத்தை வெகுவாக குறைத்துவிடு. கணவரோடு தினமும் பேசுவதற்கு அதிக நேரத்தை ஒதுக்கு. கணவர், குழந்தைகளோடு பேசிக் கொண்டிருக்கும் போது செல்போனை மறந்து விட வேண்டும். குறிப்பாக படுக்கை அறைக்குள் அதை கொண்டு செல்லவே வேண்டாம்.
தனிமையும், சூழ்நிலைகளுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும். குடும்பத்தோடு அதிகமான நேரத்தை செலவிடு. அப்போது தனிமையும், பிரச்சினைக்குரிய நபரின் நினைவும் வராது.
சில மணிநேரங்கள் தனிமையில் அமர்ந்து ‘உனக்கும் கணவருக்கும் இடைவெளி உருவாக என்ன காரணம்?’ என்று சிந்தித்து, காரணங்களை எல்லாம் குறிப்பெடுத்துக்கொள். அந்த இடைவெளியை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து உடனே அதை நடைமுறைப்படுத்து. வெளியே யாரிடமோ காட்ட முன் வரும் அன்பையும், பாசத்தையும், காதல் உணர்வையும் உடனடியாக உன் கணவரிடம் காட்டு. உங்கள் வாழ்க்கையில் ரசனை குறைந்து போனதுதான் மூன்றாம் நபர் உங்கள் வாழ்க்கைக்குள் நுழைய காரணம். வாழ்க்கையை ரசனைக்குரியதாக மாற்ற உன் கணவரோடு சேர்ந்து திட்டமிடு. எல்லாவற்றுக்கும் மேலாக கணவருக்கு எப்போதும் நம்பிக்கைக்குரியவளாக இருப்பேன் என்று உறுதி எடுத்துக்கொள்’ என்றேன்.
அடுத்த அரைமணி நேரத்திலே அவள் தனது கணவரிடம் தனக்கு பிடிக்காத செயல்கள் என்னென்ன இருக்கிறது என்பதை பட்டியல் போட்டாள். அதை எப்படி அவரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்வது என்பதற்கு அவளுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. மேலும் சில விஷயங்களுக்கும் அவள் கவுன்சலிங் பெற்றுக்கொண்டு நம்பிக்கையோடு விடைபெற்றாள்.
சோஷியல் மீடியாவை 25 முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்களில் ஒரு பகுதியினர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி வருவதையும், விவாகரத்துக்கள் அதிகரித்து வருவதையும் அனை வருமே கவனத்தில் கொள்ளவேண்டும்!.