“அமைதியான கடல் ஒருபோதும் சிறந்த மாலுமியை உண்டாக்காது” என ஆங்கிலப்பழமொழி ஒன்று உண்டு. மனித இனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றிக்கும் முயற்சி தான் படிக்கட்டுகளாக இருந்திருக்கின்றன. ஆற்றின் ஓட்டத்தில் இறந்த மீன்கள் போய்க் கொண்டே இருக்கும். ஆனால் உயிருள்ள மீன்கள் நீரோட்டத்தை எதிர்த்துப் போராடும். உண்மையான வாழ்க்கை போராட்டம் நிறைந்ததே.
ஆனால் இன்றைய நவீன கால மனிதன் மறைந்த வாழ்வே வாழ துடிக்கிறான்.
தனிக் குடும்பம்
தனித் தொழில்
தனிப்பட்ட பிரச்சினைகள்
தனிமையான வாழ்வு என்று
தன்னையே தனிமைப்படுத்தி கொள்ள ஆசைப்படுகின்றான். ஏதோ ஒரு இருளின் நிழலில் தான் வாழ முயற்சி செய்கின்றான் .
இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை விட சோம்பல் மற்றும் சுயநலமுமே உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது.
பெரும்பாலும் யாரும் உறவுகளை பெரிதாக நினைப்பதில்லை, மதிப்பதில்லை. உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகி வரும் சூழ்நிலை. இதை ரொம்ப பெருமையாக ‘மாடர்ன் லைப் ஸ்டைல்’னு சொல்லிக்கொள்கின்றோம். இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும், படிப்பு, பணம் சம்பாதித்தல் ஆகியவைகளே குறிக்கோள் என நினைத்து அவைகளிலே பெரும்பொழுது கழிந்துவிடுகிறது. பொய்மையானது உண்மை எனும் முகமூடியை அணிந்து உலா வந்து கொண்டிருக்கிறது. பணமும், பதவியும்தான் உலகம், வேறெதுவும் தேவையில்லை என்று அநேக மக்கள் நம்பிக்கொண்டிருக் கிறார்கள்.
இன்றைய வாழ்வின் லட்சியம் படிப்பது, வேலைசெய்வது, திருமணம் செய்து கொள்வது, வீடுகட்டிக்கொள்வது எனச் சுருங்கிவிட்டது. காலையில் சீக்கிரமாகக் கிளம்பிப் போவதாலும், இரவில் நேரங்கழித்து வருதலும், கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நேரங்களில் பணிகளுக்கு செல்வதாலும் குடும்பத்துடன் மனம் விட்டுப் பேசவோ மகிழ்ந்திருக்கவோ பொழுதிருப்பதில்லை. தனக்காக, தன் குடும்பத்துக்காக உண்மையாக வாழும் வாழ்க்கையை விட்டுவிட்டு பிறரின் மதிப்பு, கவுரவம், புகழுக்காக வாழும் வாழ்க்கை பெருகிவிட்டது. சிறு வயதில் நாம் பட்ட துன்பம், பணப் பற்றாக்குறை பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கம் தப்பில்லை. ஆனால் அதற்காக விலைமதிக்க முடியாத தருணங் களையும் சந்தோஷத்தையும் அவர்கள் அறிய வாய்ப்பு இல்லாத வகையில் வாழ்க்கையை இயந்திரத்தனமாக்கிக் கொள்ள வேண்டுமா?
பணம் பாதாளம் வரை பாயும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழிகளைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பணத்திற்காக மனிதர்கள் எதையும் செய்வதைப் பார்க்கின்றோம். பணம் நம் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கையின் குறிக்கோளாக மாறிவிடக் கூடாது.
அன்பு, காதல், பாசம், அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு, இவைகளெல்லாம் படிப்படியாக நம்மை விட்டு விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முழுமையான அன்பு பயங்களை போக்கும் என நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அன்பு இதயம் கொண்டவர்களாக வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் செயலோ வேறுவிதமாக அமைந்து விடுகிறது.
மகிழ்ச்சியை நாம் அனைவருமே தேடிக் கொண்டிருக்கின்றோம். பல நேரங்களில் சிற்றின்பங்கள் நிரந்தரம் என அவைகளில் மூழ்கி விடுகின்றோம். போதை, பணம், வசதி, பெண், தொலைக்காட்சி, இணையதளம் என இவைகளில் இன்பத்தை தேடி அலைகின்றோம்.
சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், ‘பிரெண்ட் ஆப் பிரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் உண்மையான சந்தோஷம் என நம்புகிறோம்.
வேண்டாம் ஆபத்துகள் நிறைந்த அந்த இணைய வழி உறவு வட்டம். அதில் இருந்து வெளியேறி, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வோடு இதயவழி நட்புக்கு மாறுவோம்!
எது எதையோ, எவ்வளவு தொலைவில் உள்ளதை எல்லாமோ, நாம் இருந்த இடத்திலிருந்தே பார்க்கின்றோம். ஆனால் நமக்கு அருகில் இருப்பவர்களின் உள்ளத்தை அறிய முடியவில்லை, உறவாட நேரம் இருப்பதில்லை. ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல உறவுகளோடு , பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு உறவாட நேரம் ஏது’ என்பவை எல்லாம் சப்பைக் காரணங்கள். உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. இது தான் உண்மை.
உறவினர் வீட்டு விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய தளங்களில் யார் யாரிடமோ அறி முகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது. அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது.
சொந்தங்கள் ஒன்று கூடி பேசி மகிழ்வது வீட்டு விசேஷங்களில்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.
குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் பிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். வாழ்க்கை ஆச்சரியங்களும் அதிசயங்களும் உள்ளடக்கியது.
‘தோழமைகள் போதும் நமக்கு, உறவுகள் எதுவும் வேண்டாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக் கிடக்கும் மனநிலையை முதலில் மாற்றுவோம். உறவுகளைப் பேணுவோம். உறவுகள் தான் ஒருவரை மெருகேற்றும். மனதின் காலி இடங்களை நிரப்பும். ஒருவரிடம் அன்பு அக்கறை காட்டி, அவரைப் புரிந்துகொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும், பாராட்டவும் கற்றுக்கொண்டால் உறவுகளுக்கு இடையில் புரிதலில் சிக்கல்கள் ஏற்படாது. அதேபோல் உறவுகளை வலிமைப்படுத்தப் பேச்சும், பேசும் விதமும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பேசும் விதம் முறையானதாக இருந்தால் உறவுகளை இணைக்கும் பாலமாக அது அமைந்து அந்த உறவிற்கு இன்னும் வலிமையைச் சேர்க்கும். இப்படி உறவைப் பேணத் தெரியாமல் உறவின் இனிய உணர்வுகளை இழந்து நிற்கிறார்கள் இன்றைய தலைமுறை யினர்.
உறவுகளின் மூலமாகச் சந்தோஷங்களைச் சம்பாதித்துக் கொள்வோம். அதற்கான வாய்ப்புகள் இன்னும் நம்மிடம் உள்ளது. எல்லாவற்றையும் இழந்த பிறகு கால விரயங்களைக் கடந்த பிறகு உறவின் சந்தோஷங்களை இழந்து விட்டேனே என்று வருந்துவதை விட இப்பொழுதே நம் உறவை மேம்படுத்திக் கொள்வோம்.
சூழல்கள், உறவுகள் சேர தடையாக இருக்கலாம். ஆனாலும் சிரமம் பாராமல் உறவுகளை பேண வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாவிட்டால் நமக்கு கிடைக்கும் ஓய்வு நாளில் அவர்களை நேரில் குடும்பத்துடன் சென்று சந்தித்து கலந்துறவாடி விட்டு வரலாம். அல்லது அவர்களை நம் வீட்டுக்கு அழைத்து உபசரிக்கலாம். நல்ல அஸ்திவாரத்தின் மீது கட்டப்படுவது தான் உறுதியான கட்டிடம். நல்ல உறவுகள் மீது அமைக்கப்படுவதுதான் நல்ல வாழ்க்கை. உறவுகளைப் பேணுவோம்! உயர்வு காண்போம்!