தனது மகளின் காதலன் போன்று நடித்து தொலைபேசியில் தொடர்புகொண்டு, மகளின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
நியூயோர்க் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதான இந் நபர் 14 வயதான தனது மகளின் நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர் 16 வயதான இளைஞனாக தன்னைக் காட்டிக்கொண்டு சமூக வலைத்தளங்களில் போலி பெயரில் கணக்குகளை ஆரம்பித்து தனது மகளுடன் தொடர்பை ஏற்படுத்தினார்.
பின்னர் அச் சிறுமியை காதலிப்பதாகவும் கூறிக்கொண்டார். சமூக வலைத்தளத்தில் தன்னுடன் தொடர்பில் இருப்பவர் தன்னை உண்மையாக காதலிக்கும் இளைஞன் என அச் சிறுமி கருதினாராம். பின்னர் அச் சிறுமியின் நிர்வாணப்பபடங்களை தனக்கு அனுப்புமாறு மேற்படி நபர் நிர்ப்பந்தித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிறார்கள் தொடர்பான ஆபாசப்படங்களை வைத்திருந்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் இந் நபர் மீது சுமத்தப்பட்டன.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தான் குற்றவாளி என கடந்த திங்கட்கிழமை மேற்படி நபர் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்படி சிறுமி இனங்காணப்படுவதை தவிர்ப்பதற்காக இந் நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவர் சுமார் 250 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ளது.
இத் தண்டனை விபரம் இவ் வருட இறுதியில் அறிவிக்கப்படும்.