மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும்.
ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம்.
ஒரு வருடம் முழுவதும் முயன்றும் கர்ப்பம் ஆகவில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம்.
ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம். மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனையானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஆண் பெண் என இருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இப்பிரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. மற்றொரு பங்கு ஆண்களுக்கு ஏற்படுகிறது. கடைசி பங்கு ஆண் பெண் என இரண்டு பேருக்கும் தெரியாத காரணங்களால் ஏற்படுகிறது. மலட்டுத் தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்….
* மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் அவசியம். அது கர்ப்பம் தரிக்க சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கும். குழந்தை பெற்றெடுக்க திட்டம் போட்டிருந்தால், இது முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நிதானமாக இருங்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். மேலும் நல்ல புத்தகங்களை படியுங்கள்.
* மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்பதால் தான். ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* வயதுக்கும் மலட்டுத் தன்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும். அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும். அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிப்பது அவசியம்.
* நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது. அடிக்கடி பார்ட்டிக்கு சென்று தூக்கத்தை இழப்பவரா? கவனமாக இருங்கள். இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்திருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும்.அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறுகளை சந்திக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவையில் முக்கியமான ஒன்று தான் மலட்டுத் தன்மை.
இது மலட்டுத் தன்மைக்கு உறுதுணையாக, உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். மலட்டுத் தன்மையை நீக்க அதன் காரணத்தை முதலில் கண்டறிந்து, பின் அதற்கான சிகிச்சைகளை முடிவு செய்ய வேண்டும்.