த்ரஷ் (அல்லது கேண்டிடியாசிஸ்) என்பது கேன்டிடா எனப்படும் பூஞ்சை இனங்களால் ஏற்படும் யீஸ்ட் நோய்த்தொற்றாகும். பொதுவாக இந்த நோய்த்தொற்று பெண்களுக்கு ஏற்படும், ஆனால் சில சமயம் ஆண்களுக்கும் ஏற்படலாம்.
பெரும்பாலும், ஆண்களுக்கு ஆணுறுப்பின் தலைப்பகுதியில் இந்த நோய்த்தொற்று ஏற்படும். இதனை கேன்டிடா பலனைட்டஸ் என அழைக்கப்படுகிறது. கேன்டிடா பூஞ்சைகள் சருமம், வாய்ப்பகுதி போன்ற உடலின் பிற பகுதிகளிலும் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
ஆண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படக் காரணங்கள் (Causes of male thrush)
கேன்டிடா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் பூஞ்சை (கேன்டிடா ஆல்பிக்கன்ஸ்) நமது உடலில் இயற்கையாகக் காணப்படுகிறது. ஆரோக்கியமான சூழ்நிலைகளில் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது, ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் கேன்டிடா பூஞ்சை உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும்.
நீரிழிவுநோய் போன்ற பிற பிரச்சனைகளாலும் இந்த நோய்த்தொற்று ஏற்படலாம்.
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
பின்வரும் நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாகும்:
நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்கள்
எச். ஐ. வி
உடல்பருமன் (தோல் மடிப்புகளில் இந்தப் பூஞ்சை மிகவும் அதிகமாகப் பெருகும்)
நீரிழிவு (வகை 1 அல்லது வகை 2)
ஆண்டிபயாட்டிக் சிகிச்சையால் உடலுக்கு நன்மை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கொல்லப்பட்ட நபர்கள்
மேற்பூச்சாகப் பயன்படுத்துகின்ற அல்லது உள்ளுக்கு எடுத்துக்கொள்கின்ற கார்ட்டிக்கோஸ்டிராய்டுகளைப் பயன்படுத்துபவர்கள்
இரைப்பை குடல் பாதையில் இருக்கும் மியூக்கஸ் படலத்தில் சேதம் அல்லது பாதிப்பு
லைக்ரா அல்லது நைலான் போன்ற இறுக்கமான உடை அணிபவர்கள்
பூஞ்சை நோய்த்தொற்று உள்ளவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்கள்
கேண்டிடால் பலனைட்டசின் அறிகுறிகள் (Symptoms of Candidal balanitis)
கேன்டிடா ஆணுறுப்பின் தலைப்பகுதியைப் பாதிக்கிறது இதனால் கேண்டிடல் பலனைட்டஸ் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளாவன:
ஆண்குறியின் தலைப்பகுதி சிவத்தல்
ஆணுறுப்பின் தலைப்பகுதி வீங்குதல்
அரிப்பு மற்றும் எரிச்சல்
மொட்டு முனைத்தோலுக்கு அடியில் தடித்தல் மற்றும் அதிகமாக திரவம் அல்லது படிவு வெளியேறுதல்
துர்நாற்றம்
சிறுநீர் கழிக்கும்போது வலி
மொட்டு முனைத்தோலை பின்னோக்கி இழுப்பதில் பிரச்சனை
உடலுறவில் ஈடுபடும்போது வலி
நீரிழிவுநோய் உள்ள ஆண்களுக்கு, அறிகுறிகள் இன்னும் கடுமையாக இருக்கலாம். ஆண்குறி முனைப்பகுதியில் கடுமையாக தோல் சிவத்தல் மற்றும் வலி இருக்கலாம்.
உடலுறவின் போது ஆண்களுக்கு யீஸ்ட் நோய்த்தொற்று ஏற்படுமா? (Can men get thrush infection during sex?)
பெண்ணுறுப்பில் ஏற்படும் யீஸ்ட் நோய்த்தொற்று என்பது பால்வினை நோயல்ல, ஆனால் சில சமயம் உடலுறவின்போது ஆணுக்குப் பரவக்கூடும். எனினும், இப்படி நடப்பது மிக அரிதாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது நோய்த்தொற்று ஏற்படலாம்.
உங்களுக்கு கேண்டிடால் பலனைட்டஸ் இருந்தால் உடலுறவின்போது இந்த நோய்த்தொற்று இன்னும் மோசமாகலாம். சிகிச்சை முடிந்து, நோய்த்தொற்று தீரும் வரை உடலுறவைத் தவிர்ப்பதே நல்லது.
சில ஆண்களுக்கு, தங்கள் இணையரின் பெண்ணுறுப்பில் ஏற்பட்டிருக்கும் கேன்டிடா நோய்த்தொற்றால் ஒவ்வாமை ஏற்படலாம். இதனால் லேசான பலனைட்டஸ் (ஆணுறுப்பு முனையின் அழற்சி) ஏற்படலாம், அவரது இனையர் உரிய சிகிச்சை எடுத்துகொண்டால் இது சரியாகிவிடும்.
இதற்கான சிகிச்சை (Treatment of thrush)
ஆணுறுப்பு அல்லது தொடையிடுக்கில் ஏற்படும் இந்த நோய்த்தொற்றுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தும் (கிளாட்ரிமசோல், கேட்டகானசோல், மைக்கானசோல், ஈக்கானசோல் போன்ற) பூஞ்சான் எதிர்ப்பு கிரீம்கள் பரிந்துரைக்கப்படும்.
அரிப்பு அதிகமாக இருந்தால், அழற்சியைக் குறைக்க கார்ட்டிக்கோஸ்டிராய்டு கிரீம்கள் எனப்படும் கூடுதல் மருந்துகள் கொடுக்கப்படலாம்.
இரண்டு வாரங்களுக்குள் அறிகுறிகள் தீராவிட்டால் உள்ளுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளை (ஃப்ளூக்கானசோல்) உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
கேன்டிடா நோய்த்தொற்று மீண்டும் ஏற்பட வாய்ப்பு அதிகம், ஆகவே பாலுறவைத் தவிர்ப்பது நல்லது, அல்லது ஆணுறையைப் பயன்படுத்தலாம். சிலசமயம் இணையர் இருவருக்குமே சிகிச்சை தேவைப்படலாம்.
தடுத்தல் (Prevention)
வெப்பமான, ஈரப்பதமுள சூழல்களில் பூஞ்சான் நன்றாக வளர்ந்து பெருகும். கேன்டிடா நோய்த்தொற்றைத் தடுக்க சில தடுப்பு நடவடிக்கைகள்:
ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், கழுவிய பிறகு ஆணுறுப்பை நன்றாக உலர விடவேண்டும்.
பெர்ஃபியூம் கலந்த ஷவர் ஜெல், நறுமண சோப்புகள் போன்றவற்றை இனப்பெருக்க உறுப்புகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
இறுக்கமான உள்ளாடைகளையோ இருக்கமான ஆடைகளையோ அணிய வேண்டாம்.
உங்கள் இணையருக்கு நோய்த்தொற்றின் அறிகுறிகள் தணியும் வரை உடலுறவைத் தவிர்க்கவும்.
திரவ ஆகாரம் அதிகம் எடுத்துக்கொள்ளவும்.