என்னதான் நாகரீகம் வளர்ந்து, தங்கள் வீட்டு மகளிருக்கு எல்லாவற்றிலும் இணையான இடம் கொடுத்தாலும் ஆண்கள் அந்த விஷயத்தில் பின்தங்கித்தான் உள்ளனர். அந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமே முன்வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
அது என்ன அந்த விஷயம் என்று நீங்கள் முகம் சுழிப்பது புரிகிறது.
அதாவது, அந்த விஷயம் என்பது குடும்பக் கட்டுப்பாட்டு விஷயம்தான். ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை போதும் என்று அரசாங்கம் பிரச்சாரம் செய்து வந்தாலும், சகோதரப் பாசத்திற்காக இரண்டு குழந்தைகள் இருப்பதுதான் நல்லது என்பது பெரும்பாலானோரின் கருத்து.
சரி அப்படியே இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு முதல் காரியமாக செய்வது குடும்பக் கட்டுப்பாடுதான். பெரும்பாலான மருத்துவமனைகளில் இரண்டாவது குழந்தை பிறந்த உடனே, மருத்துவர்களே குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணிற்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையைச் செய்து விடுகின்றனர்.
ஆனால் இந்த குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைக்கு ஆண்கள் மட்டும் முன்வராததுதான் மிகப்பெரியக் கவலையளிக்கும் விஷயமாகும்.
அதாவது வாசெக்டமி எனப்படும் ஆண்களுக்கான கருத்தடை செய்து கொண்ட ஆண்கள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணும் அளவிற்குத்தான் இருப்பார்கள் போல. இந்த சிகிச்சையில், கத்தியோ, காயமோ, தையலோ, ரத்த இழப்போ எதுவும் கிடையாது என்பது இன்னொரு விஷயம்.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை பெரும் விளம்பரம், விழிப்புணர்வுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது அதுவும் எங்கோ மறைந்துவிட்டது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த முகாமில் ஆண்கள் இந்த விஷயத்திற்கு மிகவும் பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர் என்பது அப்பட்டமாக தெரிந்தது.
பெங்களூர் புறநகர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கே.ஆர். புரம் அரசு மருத்துவமனையில் இம்மாதிரியான முகாம் நடைபெற்றது. அந்த முகாம் பற்றி பல நாட்களுக்கு முன்பே ஒலிப்பெருக்கி, போஸ்டர்கள் மூலம் பலத்த பிரச்சாரம் செய்யப்பட்டிருந்த போதிலும், முகாமிற்கு வந்தவர்கள் வெறும் 5 பேர்தான். ஆம், 5 பேர்தான் வாசெக்டமி சிகிச்சை பெற்று அதற்காக, தலா ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் பெற்றுச் சென்றவர்கள்.
எல்லா விஷயங்களுக்கும் நான்தான் குடும்பத் தலைவன், எனக்குத்தான் முதல் உரிமை, முதல் மரியாதை என்று முன்நிற்கும் ஆண், இந்த விஷயத்திற்கு மட்டும் பின்தங்குவது எதனால்?
குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்று வெளியே தெரிந்தால் அவமானம் என்ற கருத்தும், அதை செய்து கொள்வது ஏதோ தங்களை ஊனப்படுத்துவது போலவும், ஆண்மைத் தன்மையை இழப்பது போலவும் ஆண்கள் நினைப்பதே இதற்கு முக்கிய் காரணம் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
பிள்ளைப்பெறும் கஷ்டத்தைத்தான் பெண்கள் படுகிறார்களே? இந்த கஷ்டத்தையாவது நீங்கள் பகிர்ந்து கொள்ளலாமே?