வினோத்குமார் மர்ம சாவு தொடர்பாக போலீஸ் வளையத்திலிருந்த அல்போன்ஸா, முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவானார். விசாரணைக்காக அவரை போலீசார் தேடுகின்றனர்.
பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் குழந்தையுடன் வசித்தார். அதே வீட்டில் வினோத்குமார் என்ற இளைஞரும் தங்கி இருந்தார். இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்ந்தனர்.
இந்த நிலையில் வினோத்குமார் திடீரென மர்மமான முறையில் அல்போன்சா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அல்போன்சா தரப்பில் கூறப்பட்டது. ஆனால் வினோத்குமாரை அல்போன்சா கொலை செய்து விட்டதாக அவரது தந்தை குற்றம் சாட்டினார்.
அல்போன்சாவும் அவருடைய தம்பி ராபர்ட்டும், வினோத்குமாரை அடித்து கொன்று பிணத்தை தூக்கில் தொங்கவிட்டதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வினோத்குமாரின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அல்போன்சாவிடமும் நேரில் விசாரித்தார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து அல்போன்சாவும், ராபர்ட்டும் சென்னை முதன்மை கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இவ்வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எல்.ஜெகன் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். வினோத்குமார் தந்தை சார்பில் ஆஜரான வக்கீலும் முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பொன்.கலையரசன் நடிகை அல்போன்சாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் இவ்வழக்கில் அல்போன்சா எந்த நேரத்திலும் கைது ஆகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில் அல்போன்சா வீட்டில் இருந்த குழந்தையுடன் திடீரென மாயமாகி விட்டார். வீடு பூட்டி கிடக்கிறது. முன் ஜாமீன் தள்ளுபடியானதால் கைதாகலாம் என பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்துக்குச் சென்று விட்டதாக தகவல் பரவியுள்ளது.
அல்போன்சா மீது இப்போது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வினோத்குமார் தற்கொலைக்கு அவர்தான் காரணம் என்பது உறுதியானால், அவர் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்படும்.