Home சூடான செய்திகள் அம்பலத்துக்கு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்

அம்பலத்துக்கு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள்

22

இது இன்றைய, நேற்றைய பிரச்சினை அல்ல. மனிதகுலம் எப்போது தோன்றியதோ, அநேகமாக அப்போதே ஆரம்பித்து இருக்கும்.

பணிபுரியும் அலுவலகங்கள், பயணத்தின் போது, பொது இடங்கள் என்று பல இடங்களிலும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

அப்படி இருக்கும் போது கவர்ச்சிகரமான துறை என்று கருதப்படும் சினிமாவில் பாலியல் ரீதியிலான சீண்டல்கள்-சில்மிஷங்கள்-தொல்லைகள்-வன்முறைகள் இல்லாமல் இருக்குமா என்ன?

சினிமா சான்ஸ் கிடைக்கவேண்டும் என்றால், பலரையும் ‘அனுசரித்து’ போகவேண்டும் என்று அந்த காலத்திலேயே சொல்வார்கள்.

அரசல் புரசலாக, இலைமறை காயாக இருந்த இந்த சமாச்சாரம் இப்போது பகிரங்கமாக அம்பலத்துக்கு வந்து இருக்கிறது.

திரையுலகில் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை நடிகைகள் பலர் வெளிப்படையாக கூறத் தொடங்கி உள்ளனர். படுக்கையை பகிர்ந்தால்தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கக்கூடிய நிலை உள்ளது என்ற ரகசியத்தை ‘கபாலி’ பட நாயகி ராதிகா ஆப்தே சமீபத்தில் பகிரங்கமாக போட்டு உடைத்தார்.

இப்படிப்பட்ட கசப்பான அனுபவம் நடிகை கஸ்தூரிக்கும் ஏற்பட்டு உள்ளது. “உன்னுடைய ‘ரேட்’ என்ன?” என்று பகிரங்கமாக என்னிடம் கேட்டவர்கள் உண்டு என்று அவர் தனது வேதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

திரையுலகில் பெண்களுக்கு இதுபோன்ற தொல்லைகள் ஏற்படுவதாக நடிகை வரலட்சுமி சரத்குமாரும் சாடி இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன், நடிகை ஐஸ்வர்யா ராயை அடைய விரும்பி, அவரை தனியாக தன்னுடன் அனுப்பி வைக்கும்படி பலமுறை நச்சரித்ததாகவும், அவருடைய நோக்கம் தெரிந்ததால் அதை தான் ஏற்கவில்லை என்றும் ஐஸ்வர்யா ராயிடம் முன்பு மேனேஜராக இருந்த சீமோன் ஷெப்பீல்டு என்பவர் சமீபத்தில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பெண்கள் விஷயத்தில் இந்த வெயின்ஸ்டீன், ஒரு ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு. அவர் ஐஸ்வர்யாராயை அடைய துடித்து ஏமாந்த சமாச்சாரம் வெளியானதை தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்முறைகளுக்கு எதிரான கருத்துகளை பதிவிடுவதற்காக சமூக வலைத்தளத்தில், ‘நானும் பாதிக்கப்பட்டேன்’ என்ற அர்த்தத்தில் ‘மீ டூ’ (‘னீமீ tooÕ) என்ற ‘ஹேஷ்டேக்’ ஆரம்பிக்கப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோதான் இந்த ‘மீ டூ’ பிரசார இயக்கத்தை பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவைத்தார்.

இதைத்தொடர்ந்து, தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை இதுவரை உள்ளுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்த பல பெண்கள், அதை இப்போது பகிரங்கப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

பில் கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அவருடன் இணைத்து பேசப்பட்ட வெள்ளை மாளிகையின் பணிப்பெண் மோனிகா லெவின்ஸ்கி, நடிகைகள் ரீமா கலிங்கல், பார்வதி உள்ளிட்ட பலர் இந்த ‘மீ டூ’ பட்டியலில் இணைந்து இருக்கிறார்கள்.

இப்படி பல நடிகைகள், பெண் பிரபலங்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருப்பதன் மூலம், பெண்களை இந்த உலகம் எந்த இடத்தில் வைத்து இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

பெண்களை போகப்பொருளாக பார்க்கும் அவலநிலை மாறி, அவர்களுக்கும் தன்மானம், சுய விருப்பு -வெறுப்பு, உணர்வுகள் இருக்கிறது என்பதை ஆண்களும் உணரவேண்டும்.

பாலியல் தொல்லை கொடுத்த சிலர், மனம் திருந்தி ‘ஐ டிட் இட்’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

சபலப் பேர்வழிகளெல்லாம் தங்களுக்குள் ஒழிந்திருக்கும் சாத்தானை துரத்தி விட்டு, நல்லவர்களாக மாறும்போதுதான் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களுக்கும், வன்முறைகளுக்கும் முடிவு ஏற்படும்.

துரத்துவார்களா?…