ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு சுபாவம் இருக்கும். சில குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டார்கள். இதற்கெல்லாம் நேர் எதிராக சில குழந்தைகள் அமைதியாகவே இருப்பார்கள். அவர்களது நட்பு வட்டாரம் மிக சிறியதாக இருக்கும். யாரிடமும் பெரிதாக பேசமாட்டார்கள். ஹாய் சொல்லிவிட்டு அவர்கள் இடத்திற்கு சென்றுவிடுவார்கள். இவர்களுக்கு ஏதோ பாதிப்பு உள்ளது போலவும், நோயாளி போலவும் பெற்றோர் காண்பார்கள்.
இவர்களும் மற்ற குழந்தை போல சாதாரணமாக இருக்கும் குழந்தைகள் தான். இவர்களிடம் அதிகமாக கவனிக்கும் திறன் இருக்கும். நிறைய விஷயங்களை உள்வாங்கிக் கொண்டே இருப்பார்கள்.
அமைதியாக இருக்கும் குழந்தைகள் மற்றவருடன் பழக வெட்கப்படுகிறார்கள் என்றில்லை. அவர்கள் நிறைய உள்வாங்குவார்கள். பேசுவதை ஆழ்ந்து கவனிப்பார்கள். மனம் விட்டு பேசமாட்டார்களே தவிர, நன்கு கவனிப்பார்கள்.
அமைதியாக இருக்கும் குழந்தைகள் ஆக்டிவாக இல்லை, மந்தமாக இருக்கிறார்கள் என சிலர் கூறுவார்கள். ஆனால், அவர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை பற்றி உள்ளுக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
நாலு பேருடன் பேசி பழகாமல் இருக்கிறார்கள் என அவர்களை பேச சொல்லி கட்டாயப்படுத்த வேண்டும். இவர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்களுடன், பேச வேண்டும் என்ற சூழல் இருந்தால் மட்டுமே பேசும் குணாதிசயம் கொண்டிருக்கலாம்.
அமைதியாக இருக்கும் குழந்தைகள் நன்கு கவனிக்கும் திறன் கொண்டுள்ளதால். அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் வெளிப்படும். கல்வி ரீதியாக, கலை ரீதியாக. முக்கியமாக இவர்களிடம் நிறைய நினைவாற்றலும், எழுத்தாற்றலும் இருக்கும்.
இவர்கள் எப்போதும் நான்கு பேருக்கு நடுவில் தனித்து, தலைமை வகித்து இருக்க வேண்டும் என எண்ணமாட்டார்கள். இவர்கள் அதிகம் பேசாவிட்டாலும். நான்கு பேர் பேசுவதை கேட்டு, அதை ரசித்து கவனிக்கும் திறன் கொண்டிருப்பார்கள். இவர்களது நண்பர்கள் வட்டம் சற்று சிறியதாக தான் இருக்கும்.
இவர்களால் யாருக்கும் தொந்தரவு வராது. தங்களுக்கு பிடித்த வேலை என சொல்லி கொண்டு அது மற்றவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் செய்ய மாட்டார்கள். சிறந்த மனிதம் கொண்டவர்களாக விளங்குவார்கள்.
உங்கள் குழந்தை அமைதியானவராக இருக்கிறார் என்றால், அவரிடம் ஓர் சரியான சூழலில், உடன் அமர்ந்து பேசி பாருங்கள். அவர்களுக்குள் இருக்கும் விஷயங்கள் மற்றும் கனவுகள் குறித்து நிறைய பேசுவார்கள். இவர்கள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிக முதிர்ச்சி பெற்று திகழ்வார்கள்.