டீன் பருவத்தினருக்கு பாலியல் கல்வி விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். பெரும்பாலான நாடுகளில் பாலியல் சார்ந்த சிக்கல்களுக்குப் பலியாவது பெரும்பாலும் டீன்-ஏஜ் பெண்களே! எனவே, பாலியல் சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் சரியான நபரிடம் அதைத் தெரியப்படுத்துங்கள், தெளிவு பெறுங்கள். மருத்துவரோ, பெற்றோரோ, அல்லது பக்குவம் வந்த பெரியவர்களையோ அணுகுங்கள். தப்பான நண்பர்களிடம் பேசி சிக்கலைப் பெரிதாக்கி விடாதீர்கள்.
இந்த வயதில் ஏற்படும் உடலின் வளர்ச்சி மாற்றங்கள் பெண்களுக்குள் பயத்தையும் கிளர்ச்சியையும் உருவாக்கி விடுகின்றன. இதைத் தெரிந்து கொள்ளும் ஆண்கள், அவர்களை வலைக்குள் விழ வைத்து விடுகிறார்கள். ஒரு த்ரில், ஒரு அனுபவம், ஒரு காதல் என ஏதேனும் மர்ம வலைகள் உங்களுக்கும் விரிக்கப்படலாம். எனவே, அதுகுறித்த விழிப்பு உணர்வு டீன் பருவத்தினருக்கு மிக அவசியம்.
முகம் தெரியாத நபர் உங்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுத்து உங்கள் கவனத்தைக் கவர்கிறாரா… தேவையில்லாமல் சில்மிஷப் பேச்சுகளை நடத்துகிறாரா? உடனடியாக ‘கட்’ செய்து விடுங்கள். தொடர்ந்தால், ‘புகார் கொடுப்பேன்’ என மிரட்டுங்கள். மீண்டும் தொடர்ந்தால், புகார் கொடுத்து விடுங்கள்.
”உலகத்துல நடக்காததையா..?!” என்றெல்லாம் காதலரே வலை விரித்தாலும் உஷார். ”உலகத்துல கொலைகூடதான் நடக்குது. அதுக்காக, கொலை செய்யக் கிளம்பிடலாமா..?” என்று நறுக்கெனப் பேசி, சூழலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கூடவே, ”இது பத்தி இன்னொரு முறை பேச வேண்டாம்…” என கண்டிப்பாகச் சொல்லி விடுங்கள்.
‘எமோஷனல் பிளாக் மெயில்’ என்பது ரொம்ப டேஞ்சர். உங்களிடம் நட்பு காட்டி, அன்பு காட்டி, பாசம் காட்டி சிலர் தப்பு செய்யத் தூண்டுவார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவதும், பாசத்தைக் காட்டி மிரட்டுவதும் இந்த விஷயத்தின் ஒன்றுதான். எனவே, இத்தகைய கண்ணிகளில் சிக்காதீர்கள்.
டெக்னாலஜி டிஸ்டர்பன்ஸ்!
டீன்-ஏஜ் பருவத்தினர் இன்றைய டெக்னாலஜிகளை பற்றிய அப்டேட்களோடு இருப்பது, நல்ல விஷயம். அதேசமயம், அதன் ஆபத்தையும் உணர வேண்டும். குறிப்பாக, கேமரா மொபைல் போன்கள் மீது கவனமாக இருங்கள். நண்பர்கள் யாராவது உங்களை ‘குறும்புப்’ படம் எடுத்தால், கண்டிப்புடன் தடுத்துவிடுங்கள்.
. எடுக்கப்பட்ட படம் என்பது சொல்லப்பட்ட வார்த்தை போல. அது எங்கெல்லாம் போய்ச் சேரும் என்பதைச் சொல்ல முடியாது. உங்கள் முன்னால் டெலீட் செய்யப்பட்ட படத்தைக் கூட மீண்டெடுக்கும் மென்பொருட்கள் உண்டு. அதனால் யாராவது ”போட்டோவை எடுக்கிறேன். நீயே டெலிட் செஞ்சுடு” என்று சொன்னாலும், ”வேண்டவே வேண்டாம்” என பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.
புளூ டூத் வகையறாக்களை எப்போதும் ‘ஆஃப்’ செய்தே வைத்திருங்கள். அதுதான் தேவையற்ற படங்கள், வீடியோக்கள் போன்றவை பரவ ஒரு முக்கிய காரணம். நினைவில் கொள்ளுங்கள்… உங்களை அறியாமலேயே உங்கள் மொபைலில் இருக்கும் சர்வ சங்கதிகளையும் திருட இப்போது வசதிகள் உண்டு.
பாலியல் சார்ந்த படங்கள் அனுப்புவது, செய்திகள் அனுப்புவதெல்லாம் தப்பு… நீங்கள் அனுப்பினாலும், உங்களுக்கு வந்தாலும். பாதிக்கப்பட்ட நபர் உங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தால்… விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
பிரவுஸிங் சென்டர் போகிறீர்களா? உஷாராக இருங்கள். பெரும்பாலானவை ரகசிய கேமரா வைத்து இயக்கப்படுபவை. உங்கள் சேட்டைகள் பதிவாகும். பின் உங்களை மிரட்டி மீண்டும் மீண்டும் தப்பு செய்ய வைப்பார்கள்.
இணையத்தில் வாழ்க்கைக்கு மிகமிகத் தேவையற்ற வலைதளங்களில் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் போன்ற பர்சனல் தகவல்களைக் கொடுக்காதீர்கள்.
தவறான தளங்களைத் தவிர்த்து, கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், உலக அரசியல் என ஆரோக்கியமான தளங்களை தரிசி யுங்கள். குறிப்பாக, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள முக்கியப் பத்திரிகைகள் இணையத்தில் இலவசமாகவே இருக்கின்றன. அவற்றைப் படித்துப் பயன்பெறுங்கள்.